Wednesday, 16 July 2014

மாநகராட்சிப் பள்ளிகளில் 100% தேர்ச்சி இலக்கு: மேயர்


மாநகராட்சி பள்ளியில் கல்வி பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் 100 ஆங்கில ஆசிரியர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் டெக் மகிந்திரா அமைப்பு ஆகியவை இணைந்து ஆங்கில பயிற்சியை வழங்கின. இந்தப் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியும், புதிய 150 ஆசிரியர்களை பயிற்சியில் சேர்க்கும் நிகழ்ச்சியும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி பேசியது: தனியார் பள்ளிகளில் கல்வித்தரம் அதிகம் என்ற நினைப்பு உள்ளது. இதேபோல, அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால் தகுதி குறைவு என்ற எண்ணமும் உள்ளது.

மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 3 பேர் முழுத் தகுதிகளுடன் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். வரும் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சியடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தமிழை மறந்துவிடக்கூடாது. தாய்மொழி சிந்தனைதான் அறிவுடைமையை காட்டும். தாய்மொழி சிந்தனை தாய்ப்பால் போன்றது. எளிமையானது. அதனால் ஆங்கிலத்துக்கு மட்டும் அக்கறை காட்டாமல், தாய்மொழி சிந்தனைக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்றார் மேயர்.

No comments:

Post a Comment