Sunday, 20 July 2014

தமிழகத்தில் வெளிமாநில குழந்தை தொழிலாளர்கள்: கருத்தரங்கில் தகவல்


தமிழகத்தில் வெளிமாநில குழந்தை தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர்'', என மதுரையில் தொழிலாளர் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் குறிப்பிடப்பட்டது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மீட்பு, சட்ட அமலாக்கம் என்னும் தலைப்புகளில் மாநில தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் தொழிலாளர் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், வி.வி.கிரி தேசிய தொழிலாளர் கல்வி நிலைய பயிற்சியாளர் ஹெலன் பேசியதாவது: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலை மாறிவருகிறது. இதற்கு காரணம் மாநில அளவில் நடந்து வரும் நல உதவிகள். குறிப்பாக பள்ளிகளில் இலவச கல்வி, சைக்கிள், லேப்-டாப் என பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை என ஒரு சில மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளன. இந்த குழந்தைகள் அனைவருமே வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்கள் அவசியமாக உள்ளன, என்றார். தொழிலாளர் இணை ஆணையர் ராஜா தலைமை வகித்தார். தொழில் கல்வி நிலைய இயக்குனர் பாலசுப்பிரமணியன், குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜிம்ஜேசுதாஸ், பேராசிரியர்கள் ரமேஷ்குமார், அருண்குமார் மற்றும் பலர் பேசினர். தென்மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை ஆய்வுத்துறை, சட்ட அமலாக்க அலுவலர்கள், தொழில்துறை ஆய்வாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தொழிலாளர் உதவி ஆணையர் சுப்பிரமணியம் செய்திருந்தார்.

No comments:

Post a Comment