Wednesday, 2 July 2014

விரும்பிய இடம் கிடைக்காமல் ஏமாற்றம் கலந்தாய்வில் பங்கேற்பதை தவிர்த்தனர் ஆசிரியர்கள்: நாள் முழுக்க காத்திருந்த அதிகாரிகள்


விரும்பிய இடம் கிடைக்காததால் 2ம் நாள் கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்பதை தவிர்த்ததால், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மட்டும் கலந்தாய்வு அரங்கில் நாள் முழுவதும் காத்திருந்தனர். பள்ளிக்கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொடக்க கல்வித்துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினமும், நேற்றுமாக 2 நாட்கள் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் 3,700 ஆசிரியர்கள் பங்கேற்றனர். சில மாவட்டங்களில் காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.நெல்லை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 84 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள். நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை நடந்த கலந்தாய்வில் பெரும்பாலான ஆசிரியர்கள், தங்கள் சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்திற்கு இடமாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு மாறுதல் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், நேற்று காலை 2வது நாளாக கலந்தாய்வு தொடர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் முதல் நாளே இடம் கிடைக்காமல் சென்று விட்டதால் நேற்று காலை யாரும் கலந்தாய்வில் பங்கேற்க முன்வரவில்லை. இதனால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் அதிகாரிகளும், அலுவலர்களும் பிற மாவட்டங்களில் நடைபெறும் கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் ஆப்சென்ட் தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே நேற்று பகல் 11 மணி அளவில் இரண்டு ஆசிரியர்கள் மட்டும் கலந்தாய்வுக்கு வந்தனர். 

அவர்களும் தாங்கள் விரும்பிய இடங்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். தொடர்ந்து இரவு வரை இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. ஆசிரியர்கள் வராததால் அதிகாரிகள் இரவு வரை காத்திருந்தனர். தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு இன்று (2ம் தேதி) நடைபெற உள்ளது. இத்துடன் அனைத்து கலந்தாய்வுகளும் முடிவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment