Thursday, 3 July 2014

விருதுநகர் மாவட்ட நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் முகாம்: பணியிடங்களை மறைத்ததாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு


விருதுநகரில் தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு முகாமில் இணையதளத்தில் காலிப்பணியிடங்களை மறைத்தாக குற்றஞ்சாட்டி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் சூலக்கரை ஷத்திரிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு முகாம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் டென்னீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு வட்டார பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே பட்டதாரி ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் திரளாக பங்கேற்றனர். மாவட்டம் விட்டு மாவட்டம் என்பதால் தென்மாவட்ட பகுதிகளுக்கு மாறுதல் கேட்டு பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

ஆனால் பட்டதாரி ஆசிரியர்களின் தகுதி பட்டியலை வெளியிட்டதோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடம் இல்லையென வெளியே தகவல் பலகையில் வெளியிட்டனர். எனவே காலிப்பணியிட விவரங்களை வெளிப்படையாக இணையதளத்தில் உள்ளபடி குறிப்பிட்டு காட்டாமல் மறைத்தாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினார்கள். அதையடுத்து வெளியேறி வந்த ஆசிரியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இது குறித்து பட்டதாரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் விருதுநகர் மாவட்ட கிளையின் செயலாளர் எட்வர்டு ஜெயக்குமார் கூறுகையில், காலிப்பணியிட விவரங்களை கலந்தாய்வு முகாம் தொடங்குவதற்கு முன்பாகவே தகவல் பலகையில் வெளியிடுவது வழக்கம். அதையடுத்து இணையதளத்திலும் பார்த்து அறிந்து கொள்ளலாம். 2004ல் தற்போதைய தமிழக முதல்வரால் தொகுப்பூதியத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டோம். அதையடுத்து, 2006ல் பணி வரைமுறை செய்தனர்.

இதுவரையில் 10 ஆண்டுகளாக குறிப்பிட்ட மாவட்டத்தில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் பெற்று பணியாற்றி வருகிறோம். இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு மூலம் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற முயற்சி செய்து வருகிறோம். காலிப்பணியிட விவரங்களை மறைத்து வெளிப்படைத் தன்மையில்லாமல் நடத்தி வருகின்றனர். எங்களுக்கு பின்பு உயர்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் பதவி உயர்வு பெற்று சென்றுள்ளனர்.

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பதவி உயர்வு அளிக்கப்படவே இல்லை. எனவே இனிமேலாவது நடுநிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களை தலைமையாசிரியர்களாக நியமிக்க வேண்டும். அதேபோல் தொடக்கப்பள்ளியிலிருந்து, பள்ளிக் கல்வி துறைக்கு மாறுதல் செய்யும் வகையில் அலகு விட்டு அலகு மாறும் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக அச்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் டென்னீஸ் கூறுகையில், இந்த மாறுதல் முகாமில் தென்மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால் குறிப்பிட்ட தென் மாவட்ட பகுதிகளில் காலிப்பணியிடம் இல்லை என்பது குறித்து வெளிப்படைத்தன்மையாக தகவல் பலகையில் வெளியிட்டு நடத்தி வருவதாக மட்டும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment