Sunday, 13 July 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்


கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வை முடிக்காமல் பணியாற்றுவதால், அவர்களின் வேலை, கேள்விக்குறியாகி உள்ளது.டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி முந்தைய காங்கிரஸ் அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.இது தொடர்பான அறிவிப்பை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட், 23ல் வெளியிட்டது. அறிவிப்பு வெளியான தேதியின் அடிப்படையில், யார், யார் டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்ற விளக்கத்தை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), கடந்த, 2012, மே, 28ல் வெளியிட்டது.
*அதன்படி, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும் (இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்), டி.இ.டி., தேர்வை கட்டாயம் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இதற்கு, 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
*மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, குறிப்பிட்ட தேதிக்குப் பின், பணி நியமனம் பெற்றவர்களும், மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, பணி நியமனமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.
*புதிய ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்ச்சிக்குப் பிறகே, பணி நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, 5 ஆண்டுகள் கால அவகாசம், அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.இந்நிலையில், 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனரா என்ற விவரம், கல்வித் துறையிடம் இல்லை. எனினும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் இருப்பதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

கேள்விக்குறி:

இவர்களுக்கான காலக்கெடு, அடுத்த ஆண்டுடன் முடிவதால், இவர்கள், தொடர்ந்து பணியில் நீடிக்க முடியுமா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:குறிப்பிட்ட தேதிக்குப் பின், அரசு பள்ளிகளில் நியமனம் ஆன ஆசிரியர் அனைவருமே, டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். 2012 டி.இ.டி., தேர்வில், 2,448 பேர், அதே ஆண்டின் இறுதி யில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வில், 21 ஆயிரம் பேர், அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.இவர்கள் அனைவரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றதற்குப் பின்னரே, பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். எனவே, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பிரச்னை இல்லை.தனியார் பள்ளிகளில், மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின், எத்தனை ஆசிரியர் பணியில் சேர்ந்தனர் என்ற விவரம், மாவட்ட வாரியாக சேகரிக்கப்படும்.இவர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற்றால், கண்டிப்பாக, கால அவகாசம் நீட்டிப்பாகும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment