Sunday, 20 July 2014

அரசுப்பள்ளிகளில் கணித ஆய்வுக்கூட திட்டம் கனவாய் போனது!அறிவிப்போடு முற்றுப்புள்ளியால் ஏமாற்றம்


அடிப்படை கணித அறிவை மாணவர்களுக்கு செயல்வழியாக கற்பிக்க, அரசு அறிவித்த நடுநிலைப்பள்ளிகளுக்கான கணித ஆய்வுக்கூடத் திட்டம் இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. இதனால், திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது.
அரசுப்பள்ளிகளில், பயிலும் மாணவர்கள் கணிதப்பாடத்தை மனப்பாடம் செய்து, மதிப்பெண்களை மட்டும் இலக்காக கொண்டு படிப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. இந்நிலையை மாற்ற, கணிதத்தை செயல்வழியாக கற்பித்து, கணித பாடத்தின் அடிப்படையை மாணவர்கள் புரிந்து கொள்ள கணித ஆய்வுக்கூடம் திட்டத்தை அரசு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் அறிவித்தது.

தற்போது வரை இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. திட்டத்திற்கு முதற்கட்டமாக ஒரு மாவட்டத்தில் இரண்டு அரசு நடுநிலைப்பள்ளிகள் வீதம் 64 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அரசின் மூலம் 128 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் நடுநிலைப்பள்ளிகளில் கணித ஆய்வகக்கூடம் அமைக்க இடவசதி உள்ளதா, பள்ளியின் வளர்ச்சி, மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து மாவட்டத்திற்கு இரண்டு பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டன. அப்பள்ளி மாணவர்கள் ஆய்வுக்கூடத்தை எதிர்பார்த்து காத்திருந்து ஒரு கல்வியாண்டே முடிந்த நிலையிலும் செயல்பாட்டிற்கு வராததால் ஏமாற்றத்தில் உள்ளனர்.

சென்னை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே தலா இரண்டு பள்ளிகளில், இத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டே பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டும், இன்று வரை அப்பள்ளிகளில் ஆய்வுக்கூடத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் நடப்பு கல்வியாண்டிலாவது முழுமையாக செயல்படுத்த வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மாவட்டத்திற்கு இரண்டு பள்ளிகளில் செயல்படுத்தவே காலதாமதமாகும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் துவங்குவது சாத்தியமில்லை என்ற கருத்து கல்வியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு துவங்கியும், தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு, இந்த ஆய்வுக்கூடத்தில் எவ்விதமான உபகரணங்கள் அமைக்கப்படும், எவ்வாறு பயிற்சி அளிக்கப்படும் என்பது குறித்தும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும் பல பள்ளிகளுக்கு இத்திட்டம் குறித்த விழிப்புணர்வும் இல்லை. மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் முழுமையாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

'விரைவில் செயல்படுத்தப்படும்'திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கரோலின்கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைசோமவாரப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மட்டுமேதேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் கணித ஆய்வுக்கூடம் அமைக்க கல்வித்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் ஒவ்வொரு மாவட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இப்பள்ளியிலும் செயல்படுத்தப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment