Tuesday, 22 July 2014

ஆசிரியர்களிடம் சம்பள பிடித்தம்: ஐகோர்ட் தடை


கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்களிடம் வீட்டு வாடகைப்படி பிடித்தம் செய்யும் இணை இயக்குனரின் உத்தரவிற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி ஆசிரியர் மரியசெல்வம் தாக்கல் செய்த மனு:

மதுரை கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் ஜூலை 4ல் ஒரு உத்தரவிட்டார். அதில் உசிலம்பட்டி, செக்கானூரணி சரகத்தில் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2009 ஜூன் முதல் 2011 டிசம்பர் வரை கூடுதல் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டுள்ளது. 19 லட்சத்து 73 ஆயிரத்து 839 ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டு வீட்டு வாடகைப்படி வழங்கப்படுகிறது. பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் எங்களிடம் விளக்கம் கோரவில்லை. இணை இயக்குனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி கே.கே.சசிதரன், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment