நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது கன்னி பட்ஜெட்டை ஜூலை 10ஆம் தேதி மக்களவையில் சமர்ப்பிக்க உள்ளார். பங்குச் சந்தையிலும் கார்ப்பரேட் உலகிலும் பட்ஜெட் பற்றிய பரபரப்பும், உற்சாகமும் தெளிவாகத் தென்படுகின்றன. ஆனால் விலைவாசி உயர்வுக்கும் பணவீக்கத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கின்ற மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் பட்ஜெட்டை எதிர்பார்த்து அமைதியாகக் காத்திருக்கிறார்கள்.
பெரும்பாலான நடுத்தர மக்கள் இந்த அரசு அமைய வேண்டும் என்று வாக்களித்தவர்கள்தான். எனவே, புதிய அரசு அளிக்கும் முதல் பட்ஜெட்டில் தாங்கள் எதிர்பார்ப்பது கிடைக்கும் என்று நம்புகிறார்கள். சரி, அவர்கள் எதிர்பார்ப்பதுதான் என்ன?
தேர்தலின்போது விலைவாசிக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று உரத்த குரலில் சொல்லப்பட்டது. எனவே, இவை பட்ஜெட்டில் ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கும் என்று நிச்சயமாக நம்புகிறார்கள்.
அதே நேரம், அவர்களுக்கு உடனடியாக பயன் அளிக்கக்கூடிய சலுகைகளுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது, வருமான வரி விலக்கு வரம்பு கணிசமாக உயர வேண்டும் என்பதுதான். தற்போது இரண்டு லட்சம் ரூபாயாக இருப்பது, குறைந்த பட்சம் மூன்று லட்சம் ரூபாய் அளவுக்காவது உயரவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
இது ஐந்து லட்சம் ரூபாய் அளவுக்கு உயரும் என்ற பேச்சு கடந்த சில வருடங்களாக அடிபட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ஐந்து லட்ச ரூபாய் அளவுக்கு உயருவதற்கான நிதி நிலைமை இப்போது இல்லை என்பதையும் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்.
ஆகவேதான் புதிய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு குறைந்த பட்சம் மூன்று லட்சமாக உயரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
முன்பெல்லாம் பெண்களுக்கு தனியாக கூடுதல் உச்சவரம்பு இருந்தது. இந்தச் சலுகை பல ஆண்டுகள் இருந்தது. ஆனால் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் பெண்களுக்கு தனிச்சலுகை இல்லை என்று அறிவித்து விட்டார் அப்போதைய நிதி அமைச்சர். அது ஒரு பின்னடைவு. பெண்களுக்கு பல ஆண்டுகளாக இருந்துவந்த அந்த தனிச் சலுகையை மீண்டும் இவ்வாண்டு பட்ஜெட்டில் கொண்டு வர வேண்டும்.
60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாகவே கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதுபோல், 80 வயது நிரம்பிய மிக மூத்த குடிமக்களுக்கும் ரூ.5 லட்சம் உச்சவரம்பு தொடருகிறது. இவை இரண்டும் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும்.
வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியமான விஷயம் பிரிவு 80 இ சலுகை ஆகும். பிரிவு 80 இயின் கீழ் சேமிப்பாளர்களுக்கும், சிறு முதலீடுகள் செய்கின்ற நடுத்தர மக்களுக்கும் தற்போது ரூபாய் ஒரு லட்சமாக உள்ள உச்சவரம்பு பல காலமாக உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே, இந்தப் பிரிவு உச்சவரம்பு தற்போது குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.
மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களின் சேமிப்புகளான, பிராவிடண்ட் ஃபண்டு, பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு, தேசிய சேமிப்பு பத்திரம் (என்.எஸ்.சி.), வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான தவணைத் தொகை, 5 ஆண்டுகளுக்கான வங்கி டெபாசிட்கள், 5 ஆண்டுகளுக்கான அஞ்சல் அலுவலக டெபாசிட்கள், 2004ஆம் ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து டெபாசிட் திட்டங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூபாய் ஒரு லட்சமாக இருக்கும் உச்சவரம்பை ரூ.1.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
ஏனெனில், பெரும்பான்மையான நடுத்தர மக்களை சேமிப்பிற்கும், அந்த சேமிப்பை பாதுகாப்பான முதலீடுகளில் போட்டு வைக்கவும் ஊக்குவிப்பது இந்த 80 இ பிரிவுதான். எனவே, இந்த சிறிய சலுகையை வழங்குவதற்குப் புதிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தயங்கமாட்டார் என நாம் நம்பலாம்.
இது தவிர, வங்கி டெபாசிட்கள் மூலம் கிடைக்கும் வட்டியில் ஆண்டுக்கு ரூ.10,000 வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த உச்சவரம்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்த பத்தாண்டுகளில், ரூபாயின் மதிப்பு எந்த அளவு குறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் ரூ.10,000 என்றுள்ள வருமான வரி உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்துவது சரியாக இருக்கும். பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பெரிதும் நம்பியிருப்பது தங்கள் வங்கி டெபாசிட்களிலிருந்து வரக் கூடிய வட்டியைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கப் பிரதிநிதிகள், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை நேரில் சந்தித்தனர். அது சமயம் இந்த கோரிக்கையை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நிதி அமைச்சர் முன் வைத்துள்ளனர் என்று செய்திகள் வந்துள்ளன.
ஆக, இந்த கோரிக்கை நிதி அமைச்சரின் காதுகளை எட்டிவிட்டது. எனவே, இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை கருத்தில் கொண்டு, நிதி அமைச்சர் நியாயம் வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
மருத்துவச் செலவுகள் கடுமையாக அதிகரித்துவிட்டன. இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான வருமான வரிச்சலுகையை அதிகரிக்க வேண்டும்.
உதாரணமாக, மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டால், அதற்கான செலவுத் தொகையில் 5 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதற்கு நடுத்தர மக்களுக்கு ஊக்கம் பிறக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இந்த 5 ஆயிரம் ரூபாய் வரிவிலக்கை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது பொருத்தமாக இருக்கும்.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், மேற்கூறிய சலுகைகள் மூலம் இரண்டு நன்மைகள் ஏற்படும். ஒன்று, விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களுக்கு ஓரளவு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இரண்டாவதாக மிகமுக்கியமாக, தற்போது மக்களின் சேமிப்பு குறைந்துள்ளது. இதனால், மூலதன உருவாக்கம் குறைகிறது. இது நாம் விரும்பும் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. அண்மையில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
"ஹவுஸ் ஹோல்டு' சேமிப்பு எனப்படும் குடும்பத்துறை சேமிப்பு இந்தியாவில் 2007-08இல் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) 12 சதவீதமாக இருந்தது. ஆனால், அது 2013-14இல் 7 சதவீதமாக சரிந்துள்ளது. அதேபோல், மூலதன உருவாக்கம் 2011-12இல் ஜி.டி.பி.யில் 36.2 சதவீதமாக இருந்தது. 2012-13இல் அது 34.8 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த தகவலைக் கருத்தில் கொண்டால், தற்போது நடுத்தர மக்களின் சேமிப்புத்திறனை பேணிக் காத்திட வேண்டும் என்பது வெளிப்படை. அதற்கு வருமான வரிச்சலுகைகள் கை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆக, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கை தேவை என்றாலும், அதில் முக்கியமான ஒன்று, குடும்ப சேமிப்பை உயர்த்துவது. இந்தியர்கள் பாரம்பரியமாகவே சேமிப்புப் பழக்கம் உடையவர்கள் என்பதால், தற்போதுள்ள பணவீக்க சுமையால் அவதிப்படும் நடுத்தர மக்களுக்கு சில வருமான வரிச் சலுகைள் நிவாரணமாக இருக்கும். அத்துடன் சேமிப்பும் வளரும்.
நிதி அமைச்சர், சேமிப்பை மேலும் ஊக்குவிக்க, மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட சில சிறு சேமிப்பு மூலதனத் திட்டங்களை, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மறுபரிசீலனை செய்திட வேண்டும். அவற்றை சிறு முதலீட்டாளர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் வகையிலும் கவர்ச்சிகரமாகவும் திருத்தி அமைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உதாரணமாக, நுகர்வோர் விலைகள் குறியீடு அடிப்படையில் பணவீக்கம் சார்ந்த முதலீட்டுப் பத்திரங்களைச் (ஐய்ச்ப்ஹற்ண்ர்ய் கண்ய்ந்ங்க் ஆஹய்ந்) சொல்லலாம். மிகுந்த ஆரவாரத்துடன் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று, இதற்கான நடைமுறைகள் தெளிவாகவும் எளிமையாகவும் இல்லை. இரண்டாவது, இந்த பத்திரங்களில் முதலீடு செய்தால் வட்டியைப் பெறுவதற்கு பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில், இதன் நடைமுறைகளை எளிமைப் படுத்த வேண்டும். அடுத்து, வட்டித் தொகையை மாதாமாதம் இல்லாவிட்டாலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது பெறலாம் என்று திருத்தி அமைப்பது நிச்சயம் பலன் தரும். அரசுக்கும் இதனால் இழப்பு ஒன்றும் இல்லை.
மொத்தத்தில், நடுத்தர மக்களுக்கு - குறிப்பாக மாதச் சம்பளம் பெறுவோருக்கு - வருமான வரிச்சலுகைகள் அளிப்பதன்மூலம், பணவீக்கத்தின் சுமையையும் குறைக்கலாம்; சேமிப்பையும் முடுக்கி விடலாம்!
No comments:
Post a Comment