Tuesday, 22 July 2014

வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்


செல்போனில் ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போக்கு அண்மைக்காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வாட்ஸ்-ஆப்-ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், நூல்களைப் படிக்கும் வழக்கம் அவர்களிடையே குறைந்து வருகிறது.

காலை நேரங்களில் படிப்பு, வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில்தான் தங்களது நண்பர்களுடன் தொடர்பு கொள் கின்றனர்.

இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால், வாட்ஸ் ஆப், வைபர், ஹைக் போன்ற குறுஞ்செய்தி ஆப்-களை (செயலி) சுலபமாக பயன்படுத்த முடியும்.

இந்த ஆப்-களை கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் இலவசமாக தகவல்களைப் பரிமாறலாம், பேசவும் செய்யலாம். குறுஞ்செய்திகளைத் தவிர புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பிக் கொள்ளலாம்.

இதனால் செல்போன்களில் எஸ்எம்எஸ் அனுப்பும் வழக்கம் கூட தற்போது பெரிதும் குறைந்துவிட்டது.

பொறியியலில் முதுகலை படிக்கும் கண்ணன் வாட்ஸ் ஆப் குறித்து கூறும்போது, “நாங்கள் வகுப்புகளை முடித்து, நண்பர்களோடு பேசிக்கொள்ள இரவில்தான் நேரம் கிடைக்கிறது.

விடுதியில் பெரும்பாலானோர் வாட்ஸ் ஆப் பயன்படுத்து வதால், அதைப் பயன்படுத்த பெரிதும் எதிர்ப்பு இருப்பதில்லை” என்றார்.

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ப்ரவீணா, “நான் திருச்சியில் படித்து தற்போது பெங்களூரில் வேலை செய்கிறேன். எனது பள்ளி கல்லூரி நண்பர்களுக்காக வாட்ஸ் ஆப் குரூப் வைத்துள்ளோம். அந்த குரூப் ஆரம்பித்த பிறகுதான் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது.

சில நண்பர்கள் வெளி நாடுகளில் இருக்கிறார்கள். எனவே, அனைவரும் ஒன்றாக சேட்டிங் செய்யக் கூடிய நேரம் இரவுதான். ஆனால், என்னால் வாட்ஸ் ஆப் இல்லாமலும் இருக்க முடியும்” என்றார்.

ஆங்கிலத்தில் இளங்கலை படிக்கும் மரியா கூறுகையில், “வாட்ஸ் ஆப் குரூப்-ல் நடந்த விவாதங்களைப் பற்றி, சுவாரஸ்யமான ஸ்டேடஸ் பற்றி தினமும் வகுப்பில் பேசிக் கொள்வோம். எனது கைபேசியை பார்க்கும்போது அதில் குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றால் சற்று கவலையாக இருக்கும்” என்றார்.

இழப்புகள் அதிகம்: மருத்துவர் கருத்து

இது குறித்து மன நல மருத்துவர் ராமானுஜம் கூறியதாவது:

ஒருவர் தமது முக்கிய பணிகளுக்கும் உறவுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், ஒரு செயல் அல்லது பொருளுக்கு நேரம் ஒதுக்கினால் அவர் அதற்கு அடிமையாகியுள்ளார் என்று பொருள். அதற்கு செலவழிக்கும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வரும். அந்த பழக்கத்தால் தமக்கு, இழப்புகள் ஏற்படுகின்றன என்று தெரிந்தும் அது தொடரும். இந்திய இளைஞர்களுள் 5 முதல் 10 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். தங்கள் பிள்ளைகள் பேஸ்புக்கிலும், இன்டர்நெட்டிலுமே அதிக கவனம் செலுத்துகின்றனர் என பல பெற்றோர் புகார் கூறுகின்றனர். வாட்ஸ் ஆப்-ஐ ஒரு தொடர்பு சாதனமாக மட்டுமே கருத வேண்டும். நண்பர்களோடு நேரில் பேசுவது, நல்ல புத்தகங்களை படிப்பது, உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை இளைஞர்கள் வழக்கமாக கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment