Friday, 4 July 2014

கல்வி தரம் உயர்த்த "நூற்றுக்கு நூறு' திட்டம்


மாணவர் கல்வி தரத்தை உயர்த்தும், "நூற்றுக்கு நூறு' தேர்ச்சி திட்டத்தை, திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்த, கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.மாணவர் நலனில் அக்கறை கொண்டு, அரசு தரப்பில் இலவச சீருடை, பாட புத்தகம், கல்வி ஊக்கத்தொகை என 16 வகையான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளி வளர்ச்சிக்காக, ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், மாணவர் தேர்ச்சி நூறு சதவீதம் இருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை, கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், பல பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றாலும், சில பள்ளிகள், சொற்ப வித்தியாசத்தில் நூறு சதவீத தேர்ச்சி வாய்ப்பை இழக்கின்றன. தமிழ், ஆங்கிலம் அல்லது இதர பாடங்களில் ஏதாவது ஒன்று என ஒரு பாடத்தில், மாணவர் தேர்ச்சி பெறாதபோது, அப்பள்ளிக்கு நூறு சதவீதம் தேர்ச்சி என்ற பெருமை பறிபோகிறது.அத்தகைய மாணவர்கள் மீது கூர்மையான பார்வையும், தனிப்பட்ட கவனிப்பும், கூடுதலான அக்கறையும் கொண்டு ஆசிரியர்கள் பயிற்சி அளித்திருந்தால், நிச்சயம் அந்த மாணவர்களும் குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெற்று, பள்ளியின் தேர்ச்சி விகிதம் உயர வாய்ப்பாக இருக்கும். சில ஆசிரியர்களின் அலட்சியமும், கவனக்குறையும், பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறைய காரணமாகிறது.

இக்குறையை களைய, மதுரை கல்வி மாவட்டத்தில் "நூற்றுக்கு நூறு' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. படிப்பில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, மாதந் தோறும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, ஒவ்வொரு மாதமும், அவர்களது கல்வி தரத்தின் அறிக்கை, முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது. அதற்கேற்ப, மாண வர்களுக்கான பயிற்சி திட்டமிடப்படுகிறது.திருப்பூர் கல்வி மாவட்டத்திலும், ஒன்று மற்றும் இரண்டு பாடங்களில், சொற்ப மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெறும் வாய்ப்பை இழக்கும் மாணவர்கள் அதிகமாக உள்ளனர். பள்ளிதோறும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளவர்களில், பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, "நூற்றுக்கு நூறு' திட்டத்தில் சிறப்பு பயிற்சி அளித்தால், மாணவர்களும் தேர்ச்சி பெறுவர்; பள்ளிகளும், நூறு சதவீதம் தேர்ச்சி இலக்கை அடையும். மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசித்து, இத்திட்டத்தை திருப்பூர் மாவட்டத்திலும் செயல்படுத்த முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment