Sunday, 10 August 2014

அங்கீகாரம் இல்லாமல் 1,000 தனியார் பள்ளிகள்...தவிப்பு:நில பற்றாக்குறை பிரச்னைக்கு அரசு தீர்வு எப்போது?


தமிழகத்தில், நில பற்றாக்குறை பிரச்னையால், கடந்த 2011ல் இருந்து, அங்கீகாரம் இல்லாமல், 1,000 தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன. இந்த பள்ளிகள் மீது, எவ்வித முடிவும் எடுக்காமல், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன், தனியார் பள்ளிகளுக்கான, குறைந்தபட்ச நில பரப்பளவு குறித்து, தமிழக அரசு, ஒரு அரசாணையை வெளியிட்டது.அதில், 'மாநகராட்சி பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு, மாவட்ட தலைநகர் பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு, நகராட்சி பகுதி எனில், 10 கிரவுண்டு, பேரூராட்சி பகுதியாக இருந்தால், ஒரு ஏக்கர் மற்றும் ஊராட்சி பகுதியாக இருந்தால், மூன்று ஏக்கர் நிலமும், பள்ளிக்கு இருக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு:இந்த குறைந்தபட்ச நில பரப்பளவு இல்லாததால், 1,000 தனியார் பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் அளிக்க, தொடக்கக் கல்வித் துறை மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் மறுத்து விட்டன.
'நில பற்றாக்குறை உள்ள பள்ளிகள், 2011க்குள், கூடுதல் நில வசதியை ஏற்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு தெரிவித்தது.ஆனால், நிலம் கிடைக்காதது, நிலத்தின் விலை உயர்வு காரணமாக, கூடுதல் இட வசதியை, பள்ளி நிர்வாகங்கள் ஏற்படுத்தவில்லை. இதனால், நான்குஆண்டுகளாக, அங்கீகாரம் இல்லாமல், 1,000 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
நிபுணர் குழு:இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான நிபுணர் குழு, மாநிலம் முழுவதும் கருத்து கேட்புக் கூட்டங் களை நடத்தி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீதான பிரச்னையை, எந்த வகையில் தீர்க்கலாம் என்பது குறித்து, தமிழக அரசுக்கு, பரிந்துரை செய்துள்ளது.
இந்த அறிக்கை, பள்ளிக்கல்வி அமைச்சகத்தில், ஒரு ஆண்டாக கிடப்பில் உள்ளது. இதன்மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில், நம்பகத்தன்மை இல்லாத நிலையில், 1,000 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறியதாவது:

பிரச்னைக்குரிய பள்ளிகள் அனைத்துமே, அரசாணை வெளியான தேதிக்கு முன் ஆரம்பிக்கப்பட்டவை. நிலத்தின் விலை, தற்போது, பல மடங்கு அதிகரித்துவிட்டது.
பள்ளிக்கு பக்கத்தில் உள்ள இடத்தை வாங்கவும் வழியில்லை.பள்ளியை, தொடர்ந்து நடத்தவும் முடியாமல், மூடவும் முடியாமல், நான்குஆண்டுகளாக தவித்து வருகிறோம்.* ஒன்று, ஏற்கனவே இயங்கி வரும் பழைய பள்ளிகளுக்கு, அரசாணையில் இருந்து, விதிவிலக்கு அளித்து, அரசாணை வெளியிட வேண்டும்.* இல்லையெனில், பள்ளிகளுக்கு உள்ள இடத்தின் பரப்பளவிற்கு ஏற்ப, இத்தனை மாணவர்களை அனுமதிக்கலாம் என, ஒரு வரையறையை ஏற்படுத்தி, அமல்படுத்தலாம்.

* நிபுணர் குழுவும், இந்த ஆலோசனையைத் தான், பரிந்துரை அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இரண்டில், ஏதாவது ஒரு முடிவை, தமிழக அரசு, விரைந்து எடுக்க வேண்டும்.இவ்வாறு, நந்தகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment