தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தி முடிக்கப்பட்டதும், துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதிக்கப்படும். விவாதத்தின் முடிவில் அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளிக்கும் போது, துறையில் செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார்கள். ஆனால், இப்போது அமைச்சர்களின் பதிலுரையில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறுவதில்லை. மாறாக, மானியக் கோரிக்கை விவாதம் நடக்கும் நாளை விடுத்து பிறிதொரு நாளில் அந்த துறையில் பல அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுகிறார். அந்த வகையில், கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் தீர்ப்பு வெளியான அதே நாளில் கல்வித்துறையில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவுமாக மொத்தம் 500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இது போல் ஆண்டுதோறும் பள்ளிகள் நிலை உயர்த்தப்படுகிறதே தவிர, அவற்றின் அடிப்படை வசதிகள், கல்வி போதனைகளில் தரம் உயர்கிறதா என்றால், ‘ஆம்’ என ஓங்கிச் சொல்ல முடிவதில்லை.
குறிப்பாக, இன்னமும் ஏராளமான கிராமங்களில் பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஏதாவது ஒரு பள்ளியின் நிலை பத்திரிகைகளில் வெளியாகும் போது அல்லது எம்எல்ஏ, எம்பிக்களின் வருகையால் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. எனவே, கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் மாதந்தோறும் ஒரு மாவட்டத்தில் கிராமம், கிராமமாக சென்று பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டால் அவர்களுக்கு உண்மை நிலவரம் புரியலாம்.முதல்வர் வெளியிட்ட இன்னொரு முக்கியமான அறிவிப்பு, தமிழகம் முழுவதும் உள்ள 2,057 பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க ரூ.160.77 கோடி ஒதுக்கப்படும் என்பதுதான். இது மிகவும் வரவேற்கத்தக்கது. கிராமப்புற பள்ளிகளில் பெரும்பாலும் மாணவிகள்தான் கழிப்பறைகளை சுத்தம் செய்து வருகின்றனர். இந்த கொடுமை இனி அகலும் என நம்பலாம்.
அதே போல், சென்னை மாநகரிலேயே பல பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லாமல் கழிப்பறைகள், பொது கழிப்பறைகளை விட மிக மோசமாக உள்ளது. எனவே, தண்ணீர் வசதி ஏற்படுத்துதல், தொடர்ச்சியாக கழிப்பறைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றின் மூலமே முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின் நோக்கம் நிறைவேறும். எனவே, கழிப்பறை பராமரிப்புக்கு முறையான திட்டத்தை அதிகாரிகள் வகுக்க வேண்டும். அத்துடன் அரசு அளிக்கும் நிதி முறையாக செலவழிக்கப்படுகிறா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
No comments:
Post a Comment