வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களைப் போல வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் தரமுள்ள கல்வியினைப் பெற வெண்டும் என்று விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை. இவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை.
பெருவாரியான அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் தரமான கல்வி அளிக்காத, அளித்தாலும் அவை போதுமானதாக இல்லாத நிலையில், தரமுள்ள கல்வி பெற தனியார் கல்வி நிறுவனங்களையே அணுக வேண்டிய கட்டாயத்திற்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில், அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் தரமான கல்வியைக் கொடுக்காமல் இருப்பதற்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், பல தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் நாடெங்கிலும் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், அரசு நடத்தும் பள்ளிகளும், கல்லூரிகளும் மிக குறைந்த அளவே விரிவாக்கம் செய்யப்படுகின்றன. கல்வி வசதி அளிக்க தனியார் பெரிய அளவில் பங்கேற்க வேண்டும் என்று எண்ணி அதிகாரிகள் செயல்படுவதே இந்த நிலைக்குக் காரணம்.
மேலும், தேவைக்கு ஏற்ப புதிய பள்ளிகளையும், கல்லூரிகளையும் அரசு தொடங்காததற்கு நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகக் கூறுகின்றனர். நிதியில்லை என்று கல்வித் துறை கைவிரிப்பது ஒப்புக் கொள்ள முடியாதது.
தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் பல பெயர்களில் கட்டணங்களை வசூலிக்கின்றன. அன்றைய காலங்களில் அண்ணாமலை செட்டியார், அழகப்ப செட்
டியார் போன்ற பெரியோர், சொந்த ஆதாயம் தேடாமல் சமூக நலனிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வி நிலையங்களைத் தொடங்கினர். அத்தகைய நிலை இன்று இல்லை.
அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் போதுமானதாக இல்லை. அவற்றின் தரமும் போதுமானதாக இல்லை என்ற நிலையில், பொருளாதார வசதி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியருக்கு தனியார் கல்வி நிலையங்களில் பெறக்கூடிய தரமான கல்வி ஒரு எட்டாக் கனியாகிவிட்டது.
எப்படியாவது தரமான கல்வியைப் பெற வெண்டும் என்ற விருப்பம் உள்ள ஏழை மாணவ - மாணவியர், தங்களது பொருளாதாரச் சக்திக்கு மீறி கடன்களை வாங்கித் தரமான கல்வியைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால், பல ஏழைக் குடும்பங்கள் கடன் சுமையைத் தாங்கும் கடினமான நிலைக்கு ஆளாகியுள்ளன.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் வேறு வழியில்லாமல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் கையேந்தி மன்றாடுகின்றனர். ஆனால், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஓரளவுக்கு மேல் உதவி செய்ய முடியாது.
தரமில்லாத படிப்பை அரசு கல்வி நிறுவனங்கள் அளிப்பதற்கு எந்தவிதமான நியாயமும் இல்லை. அரசு கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்குத் தனியார் துறை போலவே ஊதியம் வழங்கப்படுகிறது. சில தனியார் கல்வி நிலையங்களை ஒப்பிடும்பொது, அவற்றைவிட கூடுதலாகவே அரசு கல்வி நிலையங்களில் ஊதியம் தரப்படுகிறது. பல
அரசு கல்வி நிலையங்களிலும் ஆய்வுக் கூடங்கள் போன்ற வசதிகள், சில தனியார் துறை கல்வி நிலையங்களுடன் ஒப்பிடும்போது தரமாகவே உள்ளன.
அரசு கல்வி நிலையங்களில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகளும் அரசியல்வாதிகளின் தலையீடும்தான் தரமின்மைக்கு முக்கியக் காரணம்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உயர் அதிகாரிகள் அரசு கல்வி நிலையங்களுக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்து, நிர்வாகத்தைச் சீர்படச் செய்வது மிகவும் அபூர்வமாகவே உள்ளது.
அவர்கள் பெரும்பாலும் தங்களது அலுவலகத்திலிருந்து தொலைபேசி மூலமாகவும் மற்றும் கோப்புகளை நகர்த்தியுமே வேலை செய்கின்றனர்.
அப்படி அவர்கள் கல்வி நிலையங்களுக்கு சில நேரங்களில் வரும்போது, தாங்கள் சிவப்பு கம்பள விரிப்புடன் வரவேற்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அரசு கல்வி நிலையங்களில் அரசியல் குறுக்கீடும், அதிக அளவில் பாதகம் ஏற்படுத்துகிறது. தவறு செய்யும் மாணவர்களுக்குத் தகுந்த தண்டனை கொடுத்து அவர்களை முன்னேற்றுவதற்கு ஆசிரியர்கள் தயங்குகின்றனர். சில மாணவர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதும் இதற்குக் காரணம். சில அரசு கல்வி நிலையங்களில் மாணவர்கள் அரசியல் கட்சிகளைச் சார்ந்து செயல்படுவதையும், பொது இடங்களில் கல்லெறிந்தும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபடுவதையும் நாம் அடிக்கடிப் பார்க்கிறோம்.
பல அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமிப்பதிலும் அவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதிலும், வேறு இடத்திற்கு மாற்றுவதிலும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறுக்கிடுவதாலும், லஞ்சம் வாங்கும் நிலையாலும் கல்வி நிலையங்களில் சிறப்பான நிலை இல்லை என்றும் பரவலாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், அரசுடமைக் கல்வி நிறுவனங்களில் தரமான கல்வி கிடைப்பது இயலாதது என்று பலரும் எண்ணத் தொடங்கிவிட்டனர்.
அரசு கல்வி நிறுவனங்களை மேம்படுத்த வேண்டுமெனில், அதற்கு அதிகாரிகள் திறம்பட ஆர்வமுடன் செயல்படவேண்டும்.
அரசு அதிகாரிகளின் மகன்களும், மகள்களும் அரசு கல்வி நிறுவனத்தில்தான் பயில வேண்டும் என்று அரசு ஆணையிட்டால், நிலைமை விரைவில் சீரடையும்.
அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், அரசுக் குடியிருப்புகளையும் அரசு வாகனங்களையும் உபயோகிக்கின்றனர். அவர்களது மகள்களும், மகன்களும் அரசு கல்வி நிறுவனங்களை உபயோகித்தால் என்ன?
No comments:
Post a Comment