Tuesday, 5 August 2014

தேர்வு பட்டியலை வெளியிடக்கோரி முதுநிலை பட்டதாரிகள் டிஆர்பியில் முற்றுகை - தினகரன்


அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் 2013 ஜூலை 21ம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக நடந்த வழக்கின் தீர்ப்பின்படி 2014 ஜனவரி 17ம் தேதி திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரி பார்ப்பு நடத்தப்பட்டது.

அதன்படி தற்காலிக தெரிவுப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அதில் விலங்கியல், புவியியல், மனையியல், விளையாட்டு ஆசிரியர் கிரேடு&1, உயிரி வேதியியல் ஆகிய பாடங்களில் தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டது. மற்ற பாடங்களுக்கான பட்டியல்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்து இருந்தது.
இதையடுத்து, முதுநிலை பட்டதாரிகள் தெரிவுப் பட்டியலை வெளியிட கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 60க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்தித்து பேச ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும் போது, முதுநிலை பட்டதாரிகள் போட்டித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக்கிளை ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக் கின் முடிவுகள் சில வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. இறுதித் தீர்ப்பு வெளியானதும் மற்ற பாடங்களுக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்படும். வரும் 14ம் தேதி திருத்திய பட்டியல் ஒன்று வெளியிட உள்ளோம். அப்போது வெளியாகவும் வாய்ப்புள்ளது என்றனர்.

No comments:

Post a Comment