Tuesday, 12 August 2014

ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம்: நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை


அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 'பாட வாரியான பணி நியமன வரிசையில், தமிழை, நான்காவது இடத்தில் வைத்திருப்பது தான், இதற்கு காரணம்' என, தமிழ் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் தேர்வில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, நேற்று முன்தினம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 10,726 பணியிடங்கள் ஒதுக்கிஉள்ள போதும், தமிழ் பாடத்திற்கு, 772 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளன.

ஆங்கிலத்திற்கு அதிகம்:

ஆங்கிலத்திற்கு, 2,822 இடங்களும், வரலாறு பாடத்திற்கு, 3,592 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அறிவியல் பாடத்திற்கு, 1,600க்கும் அதிகமான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.தமிழ் பாடத்திற்கு மட்டும், பணியிடங்கள் எண்ணிக்கையை குறைத்து வழங்கியதற்கு, தமிழ் ஆசிரியர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதுகுறித்து, தமிழ் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அரசியல் தலைவர்கள், தமிழ் தமிழ் என, மூச்சுக்கு, முன்னூறு முறை கூறுகின்றனர். ஆனால், தமிழகத்தில், தமிழ் பட்டதாரிக்கு ஏற்பட்டுள்ள உண்மையான நிலை, இது தான். தமிழ் பாடத்தில், 9,500 பேர் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற்றபோதும், 772 பேருக்கு தான், வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது.

தமிழுக்கு முன்னுரிமை வேண்டும்:

மற்ற பாடங்களுக்கு இணையாக, தமிழ் பாடத்திற்கும், வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங் களை நிரப்புவதில், தமிழ் பாடத்திற்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு, தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து, தமிழக தமிழாசிரியர் கழகத்தின், சென்னை மாவட்ட தலைவர், தாயுமானவன் கூறியதாவது:ஆசிரியர் நியமன வரிசை, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தமிழ், ஆங்கிலம் என, உள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எனில், ஒரு வகுப்பில், 120 மாணவர்கள் இருந்தால், முதலில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, மூன்று பாட ஆசிரியர் நியமிக்கப்படுவர். அதே வகுப்பில், 160 மாணவர்கள் இருந்தால் தான், தமிழ் பாடத்திற்கு, ஒரு பணியிடம் கிடைக்கும். அடுத்த 40 மாணவர்கள், கூடுதலாக இருந்தால் தான், ஆங்கிலத்திற்கு ஒரு பணியிடம் கிடைக்கும்.மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால், எட்டாம் வகுப்பு எடுக்கும் தமிழ் ஆசிரியரையே, 10ம் வகுப்பு தமிழ் பாடமும் எடுக்க சொல்கின்றனர். இதனால், புதிதாக ஒரு பணியிடம் கிடைப்பது தடைபடுகிறது. ஆங்கிலத்திற்கும் இதே நிலை தான்.

ஆங்கில பட்டதாரி ஆசிரியர்:

இதுவரை, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர் தான், ஆங்கில பாடம் நடத்தி வந்தனர். தற்போது தான், முதல் முறையாக, நேரடியாக, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுகின்றனர். அதனால், ஆங்கிலத்திற்கு, கூடுதல் பணியிடம் கிடைத்து உள்ளது.பணி நியமனத்தில், தமிழை முதலில் சேர்க்க வலியுறுத்தி, பள்ளிக்கல்வித் துறை செயலர், சபிதாவிடம், கோரிக்கை மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக, அவர் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை

காரணம் என்ன?

தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்தது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம் கூறியதாவது:காலி பணியிடங்களில், 50 சதவீதத்தை, பதவி உயர்வு மூலமும், 50 சதவீதத்தை, நேரடி பணி நியமனம் மூலமும், கல்வித் துறை நிரப்புகிறது.இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், 66.6 சதவீத இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 33.3 சதவீத இடங்கள் மட்டுமே, நேரடியாக நியமிக்கப்படுகின்றன. இந்த முறையினால் தான், தமிழ் பாடத்திற்கு, இடங்கள் குறைவாக வருகின்றன.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment