கணிதமேதை ராமானுஜன் குறித்த திரைப்படத்தை அனைத்து மாணவர்களும் காண வேண்டும் என்று, கவிஞர் புவியரசு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
பாரதி, பெரியார் பற்றி திரைப்படம் எடுத்த இயக்குநர் ஞான.ராஜசேகரன், தனது அடுத்த படைப்பாக கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு"ராமானுஜன்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ராமானுஜன் வாழ்ந்த இடங்களான கும்பகோணம், நாமக்கல், சென்னை, நெல்லூர், லண்டன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் படப்படிப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தனது கணித ஆற்றலால் உலகம் முழுவதும் ராமானுஜன் புகழ்பெற்றார். தமிழ்நாட்டில் பிறந்த ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை தமிழர்கள் இன்னமும் அறியவில்லை. அவரது கணிதத் திறமையால் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானவராகத் திகழ்கிறார்.
ராமானுஜனின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தது. அதேநேரத்தில் கணித ஆற்றலை வைத்துக்கொண்டு வாழ வழியின்றி அவர் பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளார்.
அதனை எதிர்கொண்டு உலகம் புகழும் கணித மேதையாக ராமானுஜம் வெற்றி பெற்றார். அவர் கொடுத்த சூத்திரங்களை கணித உலகம் இன்றும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டே உள்ளது. அவரது கணித முடிவுகள் அதியசங்களாகக் கருதப்பட்டுகின்றன.
தமிழில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமாக ராமானுஜன் தயாரிக்கப்பட்டுள்ளது. கணிதமேதை ராமானுஜனின் புகழை, திறமையை தமிழ் மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் வரும் 11-ஆம் தேதி (நாளை)இப்படம் திரையிடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 90 திரையரங்களில் திரைப்படம் வெளியிடப்படுகிறது. ராமானுஜம் திரைப்படத்தை அனைத்துத் தரப்பு மாணவர்களும் அவசியம் காண வேண்டும்.
அதே நேரத்தில் ஏழை மாணவர்கள் திரைப்படம் காணும் வகையில் உதவக் கூடியவர்கள் முன்வர வேண்டும். குறைந்தபட்சம் ஒரு காட்சிக்கான தொகையை நன்கொடையாகக் கொடுப்பதன் மூலம், ராமானுஜன் குறித்த வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment