முதுகலை ஆசிரியர் தேர்வில் (டி.ஆர்.பி.,) பின்பற்றும் முறையை, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) பின்பற்றாததால், பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுத வேண்டும் என 2012ல் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழை, ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஏழு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என அறிவித்தது. அதன்படி, ஆசிரியர் தேர்வாணையம் 2012 ஜூலையில் நடத்திய டி.இ.டி., தேர்வில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது 150 வினாக்களுக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கியதால் தேர்ச்சி சதவீதம் குறைந்தது. அதில் முதல் தாளில் 1,735 பேரும், 2ம் தாளில் 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்வு, மூன்று மணி நேரமாக மாற்றப்பட்டது.
அதில் முதல் தாளில் 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாளில் 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். அனைவரும் 2012 டிசம்பரில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
2013 ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையில் 32 ஆயிரம் பேர், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் அடிப்படையில் 44 ஆயிரம் பேர் என மொத்தம் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஆனால் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பி.எட்.,ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 40 மதிப்பெண்ணும், டி.இ.டி.,யில் 60 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு 'வெயிட்டேஜ்' முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இதனால் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், முதுகலை ஆசிரியர் தேர்வில் இதுபோன்று மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், டி.ஆர்.பி., தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது.
2008-09ம் கல்வியாண்டில் கல்லூரிகளில் திறனறித் தேர்விற்கு 25 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள் என புதிய நடைமுறை வந்தது. அதன்பிறகு டிகிரி படித்த மாணவர்கள் சாதாரணமாக 70 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெறுகின்றனர். பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுவதே கடினமாக இருந்தது.
இதனால், 'வெயிட்டேஜ்' முறையைப் பின்பற்றுவதன் மூலம், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைப்பது அரிதாகியுள்ளது.
2013ல் டி.இ.டி., தேர்வில் 82 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற நிலையில், 101 மதிப்பெண் பெற்ற, விருத்தாசலம் பகுதியில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதிய மாணவர் ஒருவர், 'வெயிட்டேஜ்' முறையால் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவில்லை.
அவர், கூறுகையில், ' 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வில், இரண்டாம் தாளில் 101 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் புதிய வெயிட்டேஜ் முறைபடி 65.15 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றதால் ஆசிரியர் தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை.
புதிய வெயிட்டேஜ் முறையால் 90லிருந்து 100க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்த பழைய பாடத்திட்ட மாணவர்கள் பலர் ஆசிரியர் பணிக்குத் தேர்வாகாமல் உள்ளனர்' என்றார்.
No comments:
Post a Comment