Monday, 4 August 2014

பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டுணர்ந்து செயல்படுவது எப்படி?


எப்போதும் 90 சதவீத மதிப்பெண் வாங்கும் 12 வயது சிறுமி பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு தேர்வுகளில் பாஸ்மார்க் கூட வாங்கவில்லை. எப்போதும் அமைதியாக இருக்கும் அச்சிறுமி, சென்ற இரண்டு வாரமாக எல்லாவற்றுக்கும் சண்டை போடுகிறாள். ஒரு வேலை அந்தக் குழந்தை பாலியல் தொந்தரவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, அந்தச் சிறுமியை ஒன்பதாம் வகுப்பு பள்ளி ஆசிரியர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.

பத்மாவிடம் நம்பிக்கையை வரவழைத்து பேச்சுகொடுத்தபோது, 'என் நெருங்கிய உறவினர் ஒருவர் தினமும் என் அறையினுள் வருகிறார். நான் கதவை தாழிட்டு தூங்கினால்கூட அவர் வந்து விடுகிறார். என்னைத் தொடுகிறார். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே இப்படி நடந்து கொள்கிறார். எனக்கு என்ன செய்யவதென்றே தெரியவில்லை' என்று அழுதாள்.

* பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பற்றி அவரது தாய் பகிர்ந்தது...

"ஊருக்கு அவள் அண்ணனுடன்தான் அனுப்பி வைத்தேன். பேருந்தில் ஏறும்போது சந்தோஷமாய் சென்றவள், ஊருக்கு சென்ற இரண்டு நாளில் மயங்கி விழுந்தாள். பிறகு, ஒரு வருடம் அவள் பள்ளிக்கு போகவில்லை. மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது, பாலியல் தொந்தரவிற்கு ஆளாகியிருக்கிறாள் என தெரியவந்தது."

* இன்னும் எத்தனையோ சம்பவங்கள். சமீபத்தில் பள்ளி வளாகத்தில், முக்கிய கவனப் பிரிவில் படித்து வந்த 6 வயது குழந்தைக்கு நடந்த பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு பெற்றோர்கள், ஒருவேளை தன் பிள்ளைக்கும் பாலியல் தொந்தரவு இருக்குமோ? அதனை எப்படி தெரிந்து கொள்வது? எப்படி தடுப்பது? என பல கேள்விகளை தங்களுக்குள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய கேள்விகளை முன்வைத்தபோது சில முக்கிய டிப்ஸ்களை அடுக்குகினார், பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்திவரும் ராதா சித்தாந்த்.

பாலியல் விழிப்புணர்வு கல்வி நிறுவனங்களிடம் இதே கேள்வியை நாங்கள் கேட்ட போது, குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துவர். அது அவரவர் வளர்ப்புச் சூழ்நிலையை பொருத்து அமையும். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே கொடூரர்களின் எளிய இலக்கு என்பதை முதலில் உணர வேண்டும்.

* 6-7 வயது குழந்தை, வழக்கத்துக்கு மாறாக சற்றுமுன் கழிப்பறை சென்று வந்திருந்தால்கூட படுக்கையறையில் கழித்தால் அதற்கு பாலியல் தொந்தரவும் முக்கிய காரணமாக இருக்கலாம். அவர்களை திட்டாமல் அமைதியாக அணுகினால் உண்மை என்ன என்பது தெரியும்.

* நடத்தையில் தீடீர் மாற்றம். உதாரணமாக, அமைதியான குழந்தை திடீரென்று கத்துவது, சேட்டை செய்யும் குழந்தை வித்தியாசமாக அமைதியாக இருப்பது. அவர்கள் மனதில் அழமாக இதனை யோசித்துக் கொண்டிருந்தால் இப்படி நடக்கலாம்.

* இரவில் கெட்ட கனவுகள் கண்டு அலறுவது, பெற்றோர்கள் இல்லாமல் உறங்க மறுப்பது... இவையும் குழந்தைகள் பாதுகாப்பின்மை உணர்ந்தால் நடக்க கூடிய செயல்கள்.

* பிடிப்பில் வழக்கத்துக்கு மாறான சரிவு.

* யாரிடமும் பார்க்க, பேச விருப்பமில்லாமல் இருப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட நபரிடம் போக விருப்பமில்லாமல் இருப்பது.

* தொடர்சியான வயிற்று வலியில் அவதிப்படுவது. சிறு வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தால் இப்படி நடக்கும்.

* 9-11 வயது பெண் குழந்தை திடீரென தன்னை அலங்கரித்து கொள்ளாமல், அழுக்காக தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பது.

• 12-14 வயது குழந்தை 4-5 நாட்கள் தலை வாரிக் கொள்ளாமல் இருப்பது. 2-3 ஆடைகளை ஒன்றின்மேல் ஒன்று அணிந்து கொள்வது. இவையாவும் அவர்களை யாராவது 'நீ அழகாக இருக்கிறாய்' என்று கூறி பாலியல் தொந்தரவு கொடுத்திருந்தால், அதனை தடுக்க / மறைக்க இவ்வாறு நடந்து கொள்வார்கள்.

* பள்ளியில் வழக்கத்துக்கு மாறாக அனைத்துப் பாட வேளையிலும் தூங்குவது மற்றும் யாரிடமாவது சண்டை போடுவது. இவையாவும் தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருப்பதால் வெளிப்படும் கோபத்தின் செயல்கள்.

* எல்லா செயலிலும் குழப்பத்துடன் இருப்பது; பேசும் வார்த்தையில்கூட குழப்பம் இருப்பது. இவை பெரும்பாலும் குழந்தைகள் தனக்கு நடந்ததை யாராவது அறிந்து விடுவார்களோ என்று எச்சரிகையாக பேசுவதாக எண்ணி குழப்பத்துடன் பேசுவார்கள்.

இந்த செயல்கள் யாவும் அன்றாடம் நடக்கக் கூடிய செயல்களாக தெரியலாம். ஆனாலும், உங்கள் குழந்தை ஏன் இப்படி செய்கிறார்கள் இன்று பெற்றோர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் அவர் கூறும்போது, "முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். இதுவரை நாம் கடந்து வந்த குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அனைத்திலும் தவறு செய்யும் எந்த ஒரு நபரும் தன் வேலையை முதலில் காட்டுவதில்லை. அந்த குழந்தையை நெடு நாட்கள் நோட்டம்விட்டு பிறகு தான் ஆரம்பிக்கின்றனர்.

அதே போல் ஒரு குழந்தையும், இது போன்ற சம்பவங்கள் நடந்த உடனே அதனை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அவை சில மாதங்கள், சில சமயங்களில் வருடங்கள்கூட ஆகலாம். சில நேரங்களில் அந்தக் குழந்தை கோமாவுக்கு கூட செல்ல வாய்புள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர்கள், குழந்தைகளின் ஆரம்ப வகுப்பிலேயே தீண்டலின் சரி - தவறுகளை சொல்லித் தரவேண்டும். யாராக இருந்தாலும், அவர்களின் மார்புப் பகுதிகள், இடுப்பு, தொடைகள், கால்கள் இடுக்கில் தொட்டால் அது தவறான தீண்டல் என்பதை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். பெற்றோர்களாக இருந்தாலும் அதனை எந்தக் குழந்தையும் அனுமதிக்க கூடாது. ஒரு வேலை அவ்வாறு நடக்கும்போது குழந்தைகள் அந்த இடத்தைவிட்டு அவ்வளவு வேகமாக வர இயலுமோ அவ்வளவு வேகமாக வர வேண்டும் மற்றும் அந்த குழந்தையின் நம்பகமான ஒருவரிடம் இதைப் பற்றி உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பதையும் ஆசிரியர்கள் அவர்களின் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

இந்தியாவில் ஒவ்வொரு 21 நிமிடத்துக்கும் ஒரு பாலியல் பலாத்கார குற்றம் பதிவாகிறது, ஒரு வருடத்தில் 7,200 குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளின் டிபன் பாக்ஸ் காலியாக இருந்தால், தன் குழந்தை சாப்பிட்டு விட்டதாய் நினைக்கின்றனர். உண்மையில், அவர்கள் சாப்பிட்டார்களா என்பதை கேட்கக்கூட அவர்களுக்கு நேரமில்லை. பெற்றோர்கள் இன்று பிள்ளைகளிடம் பகிர்ந்துகொள்ளும் நேரம், நாளைக்காக சேமிக்கும் நிம்மதியான நிமிடம் என்பதை இனியாவது உணர்வார்களா?

No comments:

Post a Comment