Friday, 15 August 2014

அங்கீகாரம் இல்லாத நர்சரி, தொடக்க பள்ளிகளுக்கு சிக்கல் தொடக்க கல்வி துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு


அனுமதியின்றி, அங்கீகாரமில்லாமல் இயங்கும், நர்சரி, தொடக்கப் பள்ளிகளை மூடவும், அந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, வேறு பள்ளிகளுக்கு மாற்றவும், தொடக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2,000 மழலையர் பள்ளி:சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த, வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர், தாக்கல் செய்த மனு: தனியார் பள்ளிகள் அங்கீகார சட்டத்தின்படி, தனியார் பள்ளி கள், அரசின் அங்கீகாரம் பெற வேண்டும். தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட, மழலையர் பள்ளிகள், அரசின் அங்கீகாரம் இல்லாமல் இயங்குகின்றன.சென்னையில் மட்டும், 700க்கும் மேற்பட்ட, மழலையர் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் இல்லை. ஆனால், அங்கீகாரம் பெற்று உள்ளதாகக் கூறி, ஓராண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கின்றனர்.
பல பள்ளிகளுக்கு, சொந்தமாக கட்டடம் இல்லை; கட்டட உறுதி சான்றிதழும் இல்லை. எனவே, விதிமுறைகளை கடைபிடிக்காத, சட்ட விரோத, மழலையர் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க, உத்தரவிட வேண்டும். அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், குழந்தைகளை மாற்ற வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகினர்.
மனுவை விசாரித்த, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:கல்வித் துறை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் கேட்டபடி, கால அட்டவணை, தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இறுதி உத்தரவு:அதில், 'தனியார் பள்ளிகளுக்கு, செப்., 14ம் தேதி வரை, 'நோட்டீஸ்' அனுப்பப்படும்; அதற்கு, பள்ளிகள் தரப்பில், அக்., 15க்குள், பதிலளிக்க வேண்டும். நவ., 30க்குள், பள்ளிகளை ஆய்வு செய்யும் பணியை, அதிகாரிகள் மேற்கொள்வர். ஜனவரி, 31ம் தேதிக்குள், இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளை ஆய்வு செய்யும் போது, குறிப்பிட்ட படிவத்தில், திட்டங்களை சமர்ப்பித்தால், அந்தப் பள்ளிகளை அங்கீகாரம் செய்வதற்கு பரிசீலிக்கப்படும் என்றும், அங்கீகாரத்துக்கு தகுதியில்லாத பள்ளிகளை, உடனடியாக மூடுவதற்கு, 'நோட்டீஸ்' கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மூடப்படும் பள்ளிகளில் படிப்பவர்கள், அருகில் உள்ள அரசு அல்லது தனியார் பள்ளி களில் சேர்க்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறும் பிரச்னையை, ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணயக் குழு, கவனித்துக் கொள்ளும் என்றும், கடந்த, நான்கு ஆண்டுகளில், 1,459, அங்கீகாரமற்ற பள்ளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மூடப்பட்டு உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
வேறு பள்ளியில் அனுமதி:மனுவில் குறிப்பிட்டுள்ள, 759 பள்ளிகளைப் பொறுத்தவரை, சட்டப்படி, அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கல்வித் துறை தெரிவித்துள்ள அட்டவணையை, கண்டிப்புடன் பின்பற்றி னால், திருப்தி அடைவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, மனுவில் கூறியபடி, கல்வித் துறை, நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளை மூடும் பட்சத்தில், அந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, வேறுபள்ளி களில் சேர்ப்பதை, உறுதி செய்ய வேண்டும் என, வலியுறுத்துகிறோம்.
தனியார் பள்ளிகள் தொடர்பாக, அரசு பிறப்பிக்கும் சுற்றறிக்கைகளை அவ்வப்போது, இணையதளத்தில் பதிவு ஏற்றம் செய்ய வேண்டும் என, வழக்கறிஞர் ஹேமா சம்பத் கோரினார். அதிகபட்சம், இரண்டு வாரங்களில், பதிவு ஏற்றம் செய்யப்படும் என, அட்வகேட் ஜெனரல் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment