Tuesday, 19 August 2014

TNTET : ஆசிரியர்கள் நியமனத்தில் 5சதவீத மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ்-Dinamani News


ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மனு விவரம்:ஆசிரியர்களை தேர்வு செய்யும் விதிமுறைகளைதேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்ஜிடிஇ) வகுத்து உள்ளது. இதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

மேலும், கல்வித்தகுதி அடிப்படையில் கூடுதலாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த முறையில் 2013 ஆக.17 மற்றும் 18ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கான தகுதிகளை மட்டுமே நிர்ணயிக்க மத்திய அரசு என்சிடிஇ-க்கு அதிகாரம் அளித்தது. ஆனால், அதில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்க அரசுகளை அனுமதிப்பது சட்டவிரோதமானது.
எனவே, இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகை வழங்க வகை செய்யும் என்சிடிஇ-யின் வழிகாட்டு விதிகள் மற்றும் அறிவிப்பு,தமிழக அரசு 2014 பிப்.6 ல் வெளியிட்ட அரசாணை ஆகியவற்றை செல்லாது என அறிவிக்க வேண்டும். 2013 ஆக.17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடத்திய தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரண், தேசிய ஆசிரியர் கல்விக்கவுன்சில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டது.

No comments:

Post a Comment