Thursday, 25 September 2014

அழகப்பா பல்கலை., தொலைநிலைக்கல்வி மூலம் 2 ஆண்டு பி.எட்.,படிப்பு துவக்கம் : 500 மாணவர்கள் சேர்ந்தனர்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி மூலம் 2 ஆண்டு பி.எட் பட்டப் படிப்புக்கான துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழுத் தலைவர் பேராசிரியர் சோம.கலியமூர்த்தி தலைமை வகித்துப் பேசுகையில், 2 பி.எட் பட்டப் படிப்பு பெங்களூரில் உள்ள தேசிய ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண் உயிரியல், உயிர் நுட்பவியல், சூழ்நிலையியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 500 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பி.எட் படிப்பில் சேர்ந்துள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முதலில் தாங்கள் ஆசிரியர்கள் என்ற எண்ணத்தைக் கைவிட்டு மாணவர்களாக தங்களைக் கருதினால் மட்டுமே முழுமையாகப் பாடத்தை கற்க முடியும் என்றார்.
விழாவில் பல்கலை.யின் தனி அலுவலர் எச்.குருமல்லேஷ் பிரபு, ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.கருத்தபாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி இயக்குநர் ராஜா கோவிந்தசாமி ஆசிரியர்களுக்கான நன்னெறி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொலைநிலைக்கல்வி இயக்கக ஆசிரியர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment