Sunday, 7 September 2014

2,000 பள்ளிகள் மூடப்படும் அபாயம்: நர்சரி, பிரைமரி பள்ளி சங்கம் தகவல்

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் கோவை டாடாபாத் பகுதியில் நேற்று நடந்தது. இதில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ் பேசியதாவது: தற்போது சிறிய, நடுத்தர அளவில் நடந்து வரும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்பள்ளிகளை மறைமுகமாக இழுத்து மூட பள்ளிகளில் குறைந்தபட்ச அளவில் உள்ள ஓட்டுக் கட்டிடங்கள், சிமெண்ட் கூரைகள், வேயப்பட்ட வகுப்பறை ஆகியவைகளை உடனடியாகஆர்.சி கட்டிடமாக மாற்ற வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.இதனால், பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளி நிர்வாகிகள் அங்கீகாரம் புதுப்பிக்க சென்றால், பல்வேறு காரணங்களை கூறி அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். இதனால் வரும் கல்வியாண்டில் குறைந்தபட்சமாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் இழுத்து மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் 2016ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வந்ததற்கான தடயமே இல்லாமல் போய்விடும். பின்னர் அரசுப்பள்ளிகள்,தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டும்தான் தமிழகத்தில் செயல்படும். மேலும், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பணி கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறு கிருஷ்ணராஜ் பேசினார். கூட்டத்தில், நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கோரி செப்.27ம் தேதி தமிழக முதல்வர் மற்றும் கல்வி உயரதிகாரிகளை சந்தித்து முறையிடுவது உள்ளிட்ட 6 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment