தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் மேல் படிப்பு, அனைத்து அரசு மற்றும் தனியார் துறை பணிகளுக்கு செல்ல பயன்படுகிறது. பணியில் சேருபவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பணி வழங்கும் நிறுவனங்களில் காண்பிக்க வேண்டும். அரசு பணி என்றால், பணியில் சேர்ந்தவர் அளித்த சான்றிதழ் உண்மையானதா என்பதை அறிந்து கொள்வதற்கு அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதை அரசு தேர்வுகள் இயக்கம் ஏற்று சம்பந்தப்பட்ட நபரின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து பணி வழங்கும் துறைக்கு சான்று அளிக்கும். இந்நிலையில் அனைத்து சான்றிதழ்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதையடுத்து மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மையை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தின் மூலம் விவரங்களை வெளியிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மனு செய்துள்ளன. அதற்கான விவரங்களை வழங்க அரசு தேர்வுகள் இயக்ககம் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இனி மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த விவரங்களை இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்து, இணையதள மூலமாக மட்டுமே விளக்கம் பெற முடியும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment