Wednesday, 3 September 2014

விசாரணையில் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள்: இன்று இறுதி பட்டியல்

நல்லாசிரியர் விருதுக்கான தேர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளதா? என விசாரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்., 5ல், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கல்வித் துறை சார்பில் 'நல்லாசிரியர்' விருதுகள் அறிவிக்கப்படும். விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்கள், அவர்களின் பணிக்காலத்தில் எந்த புகாருக்கும் ஆளாகாமல் இருப்பது, சமூக சேவையில் அவர்களின் பங்களிப்பு, ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு மற்றும் மாணவர்கள் சேர்க்கைக்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சி போன்ற விஷயங்கள் ஆய்வு செய்யப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) ஆய்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் விவரம், பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 'லிஸ்ட்', நேற்று (ஆக., 2) முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த 'லிஸ்டில்' உள்ள ஆசிரியர்களுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளதா என விசாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கல்வித் துறை உத்தரவிட்டது. விசாரிக்கப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் நேற்று மாலை 'இமெயில்' மூலம் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியல் இன்று (ஆக.,3) காலை வெளியாகலாம் என, கல்வித்துறைவட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment