வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக நேற்று இடைக்கால தடை விதித்தது. தகுதித்தேர்வில் ஆசிரியர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிடேஜ் முறையை முழுமையாக ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இப்போராட்டம் வலுவடைந்து வருகிறது. வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி மேற்கொண்டனர். திமுக தலைவர் கருணாநிதி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளனர். ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அரசு நல்ல தீர்வு வழங்கிட பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்ற நிலையில், தகுதித்தேர்வில் அதிகப்படியான மதிப்பெண் எடுத்தும் Ôவெயிட்டேஜ்Õ எனப்படும் பிளஸ் 2, டிகிரி, கல்வியியல் படிப்புகளுக்கான மதிப்பெண்கள் அதிகம் எடுத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தகுதித் தேர்வில் 60 சதவீதம் தவிர, பிளஸ் 2வில் 10 சதவீதம், பட்டப்படிப்பில் 15 சதவீதம், கல்வியியல் படிப்பில் 15 சதவீதம் என எஞ்சிய 40 சதவீத மதிப்பெண்கள் இந்த வெயிட்டேஜிற்கு ஒதுக்கப்படுகிறது. பழைய பாடத்திட்டங்களில் படித்த பலரும் இந்த 40 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்களை குறைவாகப் பெறும் நிலையில் உள்ளனர். எனவே ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த வெயிட்டேஜ் முறையை நீக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வின் அடிப்படையில்தான் பணி நியமனம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. ஆனால் வெயிட்டேஜ் முறையை தமிழக அரசு கூடுதலாக சேர்த்ததன் விளைவாக ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பல்வேறு தரப்பிலும் போராட்டம் வலுத்துள்ள நிலையில் ஐகோர்ட் மதுரை கிளை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு அதிரடியாக நேற்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை காதக்குறிச்சியை சேர்ந்த தமிழரசன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஎஸ்சி, பிஎட் முடித்துள்ளேன். 2013ம் ஆண்டு நடந்த டிஇடி தேர்வில் 92 மதிப்பெண் பெற்று பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றேன். இதனிடையே 30.5.2014ல் தமிழக அரசு ஓர் அரசாணை வெளியிட்டது.
அதில் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பிஎட் மற்றும் டிஇடி ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்ணிற்கு கருணை (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்குவதாகவும், இந்த மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் கூறப்பட்டது. இருபது ஆண்டுக்கு முந்தையதற்கும், தற்போதைய கல்வி முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதேபோல் மதிப்பெண் கணக்கிடுவதிலும் வேறுபாடு உள்ளது. தற்போது சுலபமான பாடமுறை பின்பற்றப்படுவதால் அதிக மதிப்பெண் பெறமுடிகிறது. ஆனால் முன்பு கடினமான பாடதிட்டத்தால் அதிக மதிப்பெண் பெறமுடியவில்லை. அந்த உத்தரவில் பணி மூப்பு மற்றும் அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படவில்லை. எனக்கு 20 வருட கற்பித்தல் அனுபவம் உள்ளது. இதுபோன்ற உத்தரவு துரதிருஷ்டவச மானது. அறிவியல் பூர்வமானது அல்ல. டிஇடி தேர்வில் 92 மதிப்பெண் பெற்ற எனக்கு, அரசாணைக்கு பின் கட்-ஆப் மதிப்பெண் 59.08 ஆக குறைந்தது.
இதனால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. டிஇடி தேர்வின் அடிப்படையில் சமமான அளவீட்டு முறையை பின்பற்றவேண்டும். என்னை தகுதி பெற்றவனாக அறிவித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் அரசா¬ணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதேபோல் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முக்குளத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் ராமக்கண்ணன் உள்ளிட்ட 16 பேர் தனித்தனியாக மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஆசிரியர் பணி நியமனங்களுக்காக கவுன்சலிங் நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் பணி நியமனங்கள் எதுவும் செய்யக்கூடாது. யாருக்காவது பணி நியமன ஆணை வழங்கியிருந்தால் அவர்கள் பணியில் சேரக்கூடாது,‘‘ என இடைக்காலத் தடை விதித்தார். மனு குறித்து பள்ளி கல்வித்துறை செயலாளர், இயக்குநர் மற்றும் டிஆர்பி தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
இதுவரை நடந்தது...
* அரசுப் பள்ளிகளில் தற்போது 14,700 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசு அறிவித்தது. இதன்படி, இன சுழற்சி முறையில் பணியிடங்கள் பிரிக்கப்பட்டு உரிய பட்டியலை கடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சலிங் கடந்த 30ம் தேதி தொடங்கியது. 30, 31ம் தேதிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், செப்டம்பர் 1, 2ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், 3,4ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கவுன்சலிங் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை அறிவித்தன.
* முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30 மற்றும் 31ம் தேதி நடந்த கவுன்சலிங்கில் 2,353 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளனர்.
* பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நேற்று வரை நடந்த கவுன்சலிங்கில் 5,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளனர்.
* தொடக்க கல்வித்துறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க செப்டம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடந்த கவுன்சலிங்கில் 975 இடைநிலை ஆசிரியர்கள், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளனர்.
* மீதம் உள்ளவர்களுக்கு 5ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
பணிநியமன ஆணையை திரும்ப பெற்ற அதிகாரிகள்
சேலத்தில் நேற்று நடந்த ஆசிரியர் கலந்தாய்வில் வழங்கப்பட்ட பணிநியமன ஆணைகளை அதிகாரிகள் திரும்ப பெற்றனர். இதனால் கலந்தாய்வுக்கு வந்த பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நீடித்தது. தமிழக அளவில் 14 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கான பணி நியமனம், கடந்த மாதம் 30ம் தேதி முதல், நடந்து வருகிறது. இதில் முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டது. நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை ஆன்லைன் கலந்தாய்வு தாமதமாகத் துவங்கியது. சேலத்தில் சிறுமலர் பள்ளியில் கலந்தாய்வு துவங்கி 3 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கலந்தாய்வுக்கு தடை விதிக்கப்பட்டதாக பரபரப்பு எழுந்தது.
இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், கலந்தாய்வு நடத்தலாம், ஆனால் பணி நியமன ஆணை வழங்கக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் நேற்று சேலத்தில் 3 பேருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணை திரும்பப் பெறப்பட்டது. கலந்தாய்வு தொடர்ந்து நடக்கும். நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பின்னர் கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றனர்.
No comments:
Post a Comment