Saturday, 13 September 2014

இணையதளம் மூலம் விளம்பரம்: அரசு லேப்டாப் விற்பனை


தமிழக அரசு மக்களின் நல்வாழ்வு திட்டத்திற்கு பல்வேறு இலவசங்களை அளித்து வருகிறது. ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக நிலம், ஆடு, மாடுகள் வழங்கப் படுகின்றன. பசுமை வீடுகளும் கட்டி கொடுக்கப்படுகின்றன. இவற்றில் சிலர் வறுமை காரணமாக தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச ஆடு, மாடுகளை விற்று விடுகின்றனர்.
அதுபோல் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன.

பாடங்களை உலகத்தரத்துடன் படிப்பதற்காக அரசு இதனை வழங்குகிறது. ஆனால் ஒரு சில மாணவர்கள் வறுமை காரணமாகவும், ஏற்கனவே லேப்டாப் வைத்திருக்கும் வேறுசில வசதிபடைத்த மாணவர்களும் அரசு வழங்கிய இலவச லேப்டாப்களை விற்று விடுகின்றனர்.

மறைமுகமாக நடக்கும் இந்த செயல் தற்போது இணையதளம் மூலம் நடந்து வருகிறது. ஓ.எல்.எக்ஸ் என்ற இணையதளம் பழைய பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் வசதி வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. இதன்மூலம் சில மாணவர்கள் அரசு தங்களுக்கு இலவசமாக அளித்த லேப்டாப்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் இணையதளம் மூலம் அரசின் இலவச பொருட்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மாணவர்களின் இந்த திட்டங்களுக்காக அரசு பல லட்சம் ரூபாய் செலவு செய்து வருகிறது.

ஆனால் பயனாளிகள் சிலர் அதனை முறையாக பயன்படுத்திக்கொள்ளாமல் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment