Friday, 5 September 2014

பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமன தடையை எதிர்த்து அரசு மேல்முறையீடு

உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைதமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து விருதுநகர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கும், ஏற்கெனவே பணி நியமனம் பெற்றவர்கள் பணியில் சேரவும் தடை விதித்தார். அதே நேரத்தில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நடத்தலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் தனி நீதிபதியின் இந்த தடையை விலக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு நகல் இன்னும் வெளிவராத நிலையில், உத்தரவு நகல் தாக்கல் செய்யாததற்கு விலக்கு வழங்கி தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு பட்டியல் இடப்படாத நிலையில், நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி வியாழக்கிழமை ஆஜராகி, ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என நீதிபதிகளை கேட்டுக்கொண்டார். அவர் மேலும் வாதிடும்போது, ‘வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை.
மதுரை கிளையில் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும்’ என்றார். அப்போது நீதிபதிகள், ’தனி நீதிபதியின் உத்தரவு இன்னும் தயாராகவில்லை. எதிர் தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க முடியாது எனக் கூறியதுடன், அரசின் மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும்’என்றனர்.

No comments:

Post a Comment