Thursday, 4 September 2014

பத்தில் இருந்து பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு சமீபகாலத்தில் அதிகரித்து வருகிறது!!

குழந்தை பருவம் கவலையே இல்லாதது என்கிற பொதுக்கூற்று, இப்போது தகர்ந்து வருகிறது. அவசரகதியில் ஓடும் நவீன உலகம், காவு வாங்கி வரும் பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. வாழ்க்கை வெறுத்து, தற்கொலை எண்ணம் முளைவிடுவது முன்பெல்லாம் இளவயது, நடுத்தர வயதினரிடம்தான் இருந்தது. இப்போது பிஞ்சுக் குழந்தைகள் கூட சர்வசாதாரணமாக தற்கொலைக்கு துணிந்து விடுகின்றனர். சமீபத்தில் நடந்த சம்பவம் அதிர்வூட்டுகிற வகையில் உள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த மாணவி, பள்ளிக் கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை, புத்தகப் பையில் மறைத்து வைத்து எடுத்துவந்து பள்ளியில் இச் செயலை செய்துள்ளார். உயிரை மாய்த்தே ஆக வேண்டும் என்பதை துல்லியமான திட்டத்துடன் நிறைவேற்றியிருக்கிறார். இந்த சின்ன வயதில், சாக துணியும் அளவுக்கு அந்த மனம் காயப்பட்டிருக்கிறது. காரணம் என்னவென்று தெரியவில்லை. அம்மாவின் மரணத்துக்குப் பின், அப்பாவின் இரண்டாவது திருமணத்தால் வந்த பாதிப்பு, பிரியமாக இருந்த கல்லூரி படிக்கும் உறவுப் பெண் ஒருவரின் தற்கொலையின் எதிரொலி என பல கோணங்களில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இதேபோல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விளையாட்டில் நண்பர்கள் சேர்க்க மறுத்ததால் மனம் உடைந்த 5ம் வகுப்பு மாணவன் நேற்று தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான். அதே நாளில் சென்னை அனகாபுத்தூரில், பக்கத்து வீட்டுக்கு சென்று விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இம்மாத துவக்கத்தில், திருபுவனை அருகே, டிவி பார்ப்பதை அம்மா கண்டித்ததால் அரளி விதை அரைத்துக் குடித்து பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலை செய்திருக் கிறார். இதைத்தவிர தேர்வில் தோல்வி அடைந்ததை அவமானமாக கருதி, பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். பத்தில் இருந்து பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு சமீபகாலத்தில் அதிகரித்து வருகிறது என்று சென்னையை சேர்ந்த தற்கொலை தடுப்பு மையம் கூறுகிறது. இந்த வயதுப் பிரிவை சேர்ந்த பல குழந்தைகள், தற்கொலை எண்ணம் வருவதாக மையத்துக்கு தொலைபேசி செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வீடும் பள்ளியும் குழந்தைகளின் சொர்க்கமாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது தலைகீழாக இருக்கிறது. பல பள்ளிகள் மதிப்பெண் உருவாக்கும் இயந்திரங்களாகத்தான் குழந்தைகளை பார்க்கின்றன. குழந்தைகளின் மனதை ஆராயும் திறன்பெற்றவர்கள் அங்கில்லை. தோல்வியை தாங்கும் நெஞ்சுரம், பிரச்னைகளை தீர்க்கும் வழிகள், சிக்கலை சரிசெய்துகொள்ளும் மனப்பாங்கை வளர்த்தல் போன்ற உளவியல் அம்சங்கள் அங்கு சொல்லித்தரப்படுவதே இல்லை. வீடுகளிலும் இதே நிலை நீடிக்கும்போது குழந்தைகள் மூச்சுத் திணறுகின்றன. பகிர்ந்துகொள்வதற்கு ஆட்கள் இல்லாமல், வாழ்க்கையை முடிப்பதுதான் ஒரே தீர்வு என்ற தவறான எண்ணத்துக்கு வருகின்றன.
உடல் ஆரோக்கியத்துக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம், மன ஆரோக்கியத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும். குழந்தைகளை கூர்ந்து கவனித்து வந்து, அவர்களிடம் மாறுதல் காணப்பட்டால், அதை கேட்டு மனச்சிடுக்குகளை நீக்க வேண்டும். தெளிந்த நல் மனம்தான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும். அதற்கு குழந்தைகளை புரிந்துகொள்ளும் பண்பை பெரியவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment