Tuesday, 2 September 2014

சென்னையில் ஆசிரியர்கள் தற்கொலை முயற்சி : 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு


ஆசிரியர் பணி நியமனத்திற்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி, விஷம் குடித்த, நான்கு ஆசிரியர்கள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 'முதல்வரை சந்திக்க அனுமதிக்கும் வரை, போராட்டம் தொடரும்' என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் : தமிழகத்தில், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த ஆண்டு தகுதித்தேர்வை நடத்தியது. இதில், பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களையும் சேர்த்து, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தகுதித்தேர்வில் அதிக மதிப் பெண் பெற்றும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் குறைவால், பல ஆசிரியர் பின் தங்கும் நிலை ஏற்பட்டது. எனவே, 'வெயிட்டேஜ்' மதிப் பெண் முறையைக் கைவிட்டு, தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய வேண்டும் என, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில், கடந்த 15 நாட்களாக, தொடர் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள், நேற்று, கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் துவங்கிய பேரணி, லங்ஸ் கார்டன் சாலையில் முடிந்தது. இதில், ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். பேரணி முடிவில், 'எங்கள் பிரதிநிதிகள், முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்' என, கோரினர். 'முதல்வரை சந்திக்க முடியாது; முதல்வர் தனிப் பிரிவில் மனு கொடுக்க ஏற்பாடு செய்கிறோம்' என, போலீசார் தெரிவித்தனர்.
இதனால், ஆசிரியர்கள், போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
கபிலன், கார்த்திக், செல்லத்துரை, சந்தோஷ்குமார் என, நான்கு ஆசிரியர்கள், திடீரென பூச்சிமருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து, மயங்கி விழுந்தனர். சக ஆசிரியர்கள், நான்கு பேரையும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

'நான்கு பேரும் நலமாக உள்ளனர். தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.கண்டு கொள்ளவில்லை.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: நாங்கள், 15 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தியும், முதல்வரை சந்திக்க, போலீசார் அனுமதிக்கவில்லை. இயக்குனரக அதிகாரிகளும், தொடர் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல், எங்களை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர். முதல்வரை சந்திக்க அனுமதிக்கும் வரை, எங்களின் போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக, எந்த மாதிரியான போராட்டம் நடத்தலாம் என, கூடி முடிவு செய்வோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment