Thursday, 4 September 2014

அரசு பிடித்தம் செய்த தொகை எங்கே? : பதில் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவிப்பு

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட, 2,000 கோடி ரூபாயை, மத்திய அரசிடம், தமிழக அரசு செலுத்தவில்லை என்ற தகவல், அரசு ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க, அதிகாரிகள் முன்வராதது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த, 2003, ஏப்ரல் 1ம் தேதிக்கு பின், அரசுப் பணியில் சேருவோருக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, முதல் மாநிலமாக, தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
கடந்த, 2006 ஜூன் 1ம் தேதியில் இருந்து, அரசு ஊழியர் சம்பளத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. இத்தொகையை, மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு செலுத்தாமல் உள்ளது.
இது குறித்து, திண்டுக்கலை சேர்ந்த, பிரடெரிக் ஏங்கல்ஸ், மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, 'தமிழக அரசு பிடித்தம் செய்த தொகையை, ஆணையத்திடம் வழங்கவில்லை' என, தெரிவித்துள்ளது. இது குறித்து, நேற்று, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இத்தகவல், அரசு ஊழியர்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, யாருக்கும் தகவல் தெரியவில்லை. நிதித்துறை சார்பு செயலர், இணை செயலர் ஆகியோரிடம் கேட்டபோதும், தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர். செயலர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. முதல்வர் அலுவலகத்திற்கு சென்று விட்டதாக, அவர்களின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment