கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும் தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது. இதுவரை, புதிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசியஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,) கொண்டு வந்தது. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. 2011ல், தமிழக அரசு, விதிமுறைகளை வெளியிட்டது.
என்.சி.டி.இ., விதிமுறையில், 'ஆசிரியர் தகுதி தேர்வை, ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012, ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது.அதில், 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், அதே ஆண்டு அக்டோபரில், மறுதேர்வு நடத்தப்பட்டது. பின், கடந்த 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. நடப்பு ஆண்டில், இதுவரை, புதிய டி.இ.டி., தேர்வு நடத்தவில்லை.நடப்பு ஆண்டு முடிய, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பை, குறைந்தது, இரு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும். அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவதாக இருந்தால், தற்போது, அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
சிக்கல்:
கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, கடந்த மாதம் தான், டி.ஆர்.பி., வெளியிட்டது. தற்போது, பணி நியமனம் துவக்கப்பட்ட நிலையில், பல்வேறு வழக்குகள் காரணமாக, பணி நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இடைக்கால தடை விதித்ததால், இன்றுவரை சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தில்,'ஏற்கனவே நடந்த தேர்வு பிரச்னையே, இன்னும் தீரவில்லை. இதனால், புதிய தேர்வு குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, தெரிவித்தனர்.இதனால், புதிய தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பட்டதாரிகள்:
இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:ஆண்டுக்கு, ஒரு டி.இ.டி., தேர்வையாவது, கண்டிப்பாக நடத்த வேண்டும். பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு, அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் வேலையில் சேர, டி.இ.டி., தேர்வு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்
No comments:
Post a Comment