Thursday, 11 September 2014

TNTET - ‘வெயிட்டேஜ்’ முறைக்கு எதிராக போராட்டம்: 35 ஆசிரியர்கள் கைதாகி விடுதலை

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் – பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை பள்ளி கல்வித்துறை இயக்கக (டி.பி.ஐ.) வளாகத்தில் நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 35 பேரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment