இடைநிலை ஆசிரியர் பயிற்சி படித்தவர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் வேலை என்ற நிலை ஏற்பட்டதால், ஒரே வருடத்தில் 37 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி
பிளஸ்-2 படித்துவிட்டு 2 வருடம் ஆசிரியர் பயிற்சி முடித்தால் 1-வது வகுப்பு முதல் 5-வது வகுப்புவரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்களில் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களாக இருக்கலாம். இவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்படும் நிலை இருந்தது. உதாரணமாக தமிழ்நாடு அளவில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மாணவராக ஏ என்பவர் வந்தாலும் அவர் சீனியாரிட்டி அடிப்படையில் தான் பணியில் சேரமுடியும்.
பி என்ற மாணவர் தமிழ்நாட்டில் கடைசி மாணவராக தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர் மாணவர் ஏ, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கு முன்பாக பதிந்தால் பி தான் முதலில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்.
ஆனால் பட்டப்படிப்பு படித்தவர்கள் பி.எட். படித்தால் கூட அவர்களுக்கு போட்டி தேர்வு நடத்தி வேலைக்கு பணிநியமனம் செய்யும் நிலை உருவானது.
அதன்காரணமாக இடைநிலை ஆசிரியர்கள் படிப்பை படிக்க மாணவர்கள் கடுமையாக போட்டி போட்டனர். அடுத்த மாநிலங்களிலும் சென்று படித்தனர்.
அதன் காரணமாக தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வருடத்திற்கு வருடம் புற்றீசல்கள்போல பெருகின. அதிகபட்சமாக 725 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இருந்தன.
அதன் காரணமாக ஏராளமான மாணவர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தனர். அது தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பை விட பல மடங்கு அதிகமானதாக அமைந்தது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து உள்ளவர்கள்
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படித்த 2 லட்சத்து 69 ஆயிரத்து 744 பேர் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். அதுபோல பட்டப்படிப்புடன் பி.எட். படித்துவிட்டு 2 லட்சத்து 8 ஆயிரத்து 695 பேர்களும், முதுகலை பட்டத்துடன் பி.எட். முடித்தவர்கள் 1 லட்சத்து 88 ஆயிரத்து 37 பேர்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலைமை கடந்த 31-12-2012 அன்று நிலவரப்படி ஆகும். இப்போது மேலும் பலர் பதிவு செய்துள்ளனர். இப்படி ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து விட்டு காத்திருப்பதால் மாணவர்கள் தேவைக்கு அதிகமாக ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன.
ஒரே வருடத்தில் 37 பள்ளிகள் மூடப்பட்டன
அதன் காரணமாகவும், இப்போது யாராக இருந்தாலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்களுக்கு வேலை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டத்தை தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு அமல்படுத்தியது.
இப்படிபட்ட காரணங்களால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்தது.
அதன்காரணமாக வருடந்தோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் பல மூடப்பட்டு வருகின்றன.
படிப்படியாக இந்த பள்ளிகள் எண்ணிக்கை குறைந்து கடந்த ஆண்டு 580 ஆக இருந்தது. அவை மேலும் 37 குறைந்து இந்த ஆண்டு 543 ஆனது.
இன்னும் பல பள்ளிகள் மூடப்படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment