Saturday, 28 September 2013

லைசென்சு வாங்காமல் மாணவர்கள், பள்ளிக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிவருவதை தவிர்க்க வேண்டும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் லைசென்சு வாங்காமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருவதை தவிர்க்கும்படி அறிவுரை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
வி.சி.ராமேஸ்வர முருகன்
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டிகள் ஆகியவற்றை ஓட்டிச்செல்கிறார்கள். அதுவும் பள்ளிக்கூடத்திற்கே இவ்வாறு செல்கிறார்கள்.
இது பாதுகாப்பற்ற பயணமாகும்.
எனவே இது குறித்து தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் , மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பள்ளிக்கு லைசென்சு இன்றி வாகனம் ஓட்டி வரக்கூடாது
மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு ஏதுவாக அரசால் வழங்கப்பட்ட விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல பள்ளிகளில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பள்ளிகளுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிவருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இது போன்று பாதுகாப்பற்ற வாகனபயணத்தை மாணவர்கள் தவிர்க்கவேண்டும். அதற்கு தலைமை ஆசிரியர்கள் அந்த மாணவர்களிடம் விழிப்புணர்வு ஊட்டி தக்க அறிவுரைகள் வழங்கவேண்டும்.
அடிக்கடி பெற்றோர்களை பள்ளிக்கூடத்திற்கு வரவழைத்து மாணவர்களின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும், வெளியே செல்லும்போதும் அவர்கள் பாதுகாப்பாக செல்கிறார்களா என்பதை உறுதிபடுத்தும் வகையில் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அறுந்து கிடக்கும் மின்கம்பிகள்
பள்ளி வளாகத்தினுள் ஆபத்தான நிலையில் உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த தகவல்களை அனைத்து தலைமை ஆசிரியர்களும் பின்பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment