Monday, 30 September 2013

சிடியில் மாதாந்திர தகவல் அறிக்கை அளிக்க உத்தரவு - கூடுதல் செலவை சமாளிக்க முடியாமல் அங்கன்வாடி சூபர்வைசர்கள் திணறல்


அங்கன்வாடி மையங்களில் ஒரு அமைப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். வீடுகளில் இருந்து குழந்தைகளை மையத்திற்கு அழைத்து வருவது, சத்துணவு சமைத்து பரிமாறுவது உள்ளிட்ட பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர். அங்கன்வாடி மையங் களை கண்காணிக்க ஒரு வட்டாரத்திற்கு 4 அல்லது 5 சூபர்வைசர்கள் செயல் பட்டு வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு கீழுள்ள 30க்கும் மேற்பட்ட மையங்களை கண்காணித்து, மாதாந்திர தகவல் அறிக்கை அளிப்பர். அறிக்கையில் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளர் இளம்பெண்கள் குறித்த விபரங்களையும், சத்துணவு உருண்டை, மதிய உணவு அளிக்கப்பட்ட விபரங்களையும் தொகுத்து அளிப்பர். சுமார் 10 பக்கங்களில் அளிக்கப்பட்ட இந்த அறிக்கையை இரண்டாக பிரித்து அளிக்க, அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாதாந்திர தகவல் அறிக்கையை வெறும் பேப்பரில் எழுதி சமர்ப்பிக்க, அரசு தடை விதித்துள்ளது. சூபர்வைசர்கள் அருகில் உள்ள கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று, ஆன்லைனில் இந்த அறிக்கையை தயாரித்து சிடி மூலம் மாதம்தோறும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், அங்கன்வாடி சூபர்வைசர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. ஒரு வட்டாரத்திற்கு குறைந்தபட்சம் ஸீ3 ஆயிரத்திற்கும் மேல் செலவு ஆவதால், அதை எப்படி ஈடுகட்டுவது என தெரியாமல் விழிக்கின்றனர். இந்த சுமையை அங்கன்வாடி பணியாளர்கள் மீது சுமத்துவதால், அவர்களும் திண்டாடுகின்றனர்.

இது குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் மட்டுமே பாளை, நெல்லை, நான்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், தென்காசி என மொத்தம் 21 வட்டாரங்கள் உள்ளன. இவற்றில் நெல்லையிலும், சங்கரன்கோவிலும் நகர பிரிவும் செயல்படுகிறது. இவற்றில் ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தபட்சம் 4 சூபர்வைசர்கள் உள்ளனர். இவர்கள் மாதாந்திர தகவல் அறிக்கை தயாரிப்பதற்கு மாதம்தோறும் ஸீ3 ஆயிரம் செலவு செய்ய முடியாமல் திணறுகின்றனர். 

எனவே, ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டரை அரசே நியமித்து, அவர் மூலமாக அனைத்து கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளையும் ஆன்லைனில் சேகரிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குறைவான ஊதியம் பெறும் அங்கன்வாடி பணியாளர்களின் தலையில் கூடுதல் செலவுகளை திணிக்க கூடாது,‘‘ என்றனர். 

எக்ஸ்ட்ரா தகவல்

தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், 49 ஆயிரத்து 499 பிரதான மையங்களும், 4 ஆயிரத்து 940 குறு மையங்களும் அடங்கும்.

No comments:

Post a Comment