தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது. தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அதாவது 2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த 32 ஆயிரம் ஆசிரியர்களில், 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை. இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து கடந்த வாரம் தள்ளுபடி செய்தார். ஆசிரியர்கள் கட்டாயம் தகுதி தேர்வு எழுத வேண்டும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்ற ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பாக வக்கீல் காசிநாத பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டிவிஷன் பெஞ்ச் உத்தரவின்படி, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment