Wednesday, 2 October 2013

பிள்ளைகளின் கொடுமைகள் தொடர்பாக முதியோர்கள் கொடுத்த 1,332 புகார்களில் 895 மனுக்கள் மீது தீர்வு திருச்சியில் நடந்த விழாவில் அமைச்சர் பா.வளர்மதி பேச்சு

”பிள்ளைகளின் கொடுமைகள் தொடர்பாக முதியோர்கள் கொடுத்த 1,332 புகார்களில் 895 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு உள்ளன” என்று திருச்சியில் நடந்த விழாவில் அமைச்சர் பா.வளர்மதி கூறினார்.
திருச்சி கர்ப்பரட்சகி மகாலில் மாநில அளவிலான சர்வதேச முதியோர் தினவிழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா மனோகரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உதவி தொகை உயர்வு
முதியோர்களை மதிப்பது கடவுளை வணங்குவதற்கு சமமாகும். அதனால் தான் முதல் - அமைச்சர் ஜெயலலிதா முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஓய்வூதியம் ரூ.500 ஐ ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கி வருகிறார். இதனால் முதியோர்களுக்கு அவர்களது இல்லங்களில் மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது.
நாம் எல்லோருமே எப்போதும் இளமையாக இருந்து விட முடியாது. என்றாவது ஒருநாள் முதியவர்களாக மாறும் காலம் உண்டு. எனவே முதியோர்களை எள்ளி நகையாடாமல் அவர்களை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த விழாவில் முதியோர்களுடன் சிறு பெண் குழந்தைகளும் ஒன்றாக அமர வைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் முதியோர்களுக்கான தனி கொள்கையை முதல் - அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கி உள்ளார். இதனால் முதியோர்கள் அதிக பலன் பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் பிள்ளைகள் தங்களுக்கு உதவி செய்யாமல் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று கூறி 1,332 புகார் மனுக்கள் வந்தன. இவற்றில் தீர்ப்பாயம் மூலம் 895 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டு புகார் கொடுத்த முதியோர்கள் பயன் அடைந்து உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் வளர்மதி பேசினார்.
கலெக்டர்
திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் வரவேற்று பேசினார். சமூக நலத்துறை இயக்குனர் சேவியர் கிறிசோ நாயகம் திட்ட விளக்கவுரை ஆற்றினார். சமூக நலத்துறை செயலாளர் பஷீர் அகமது, எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி, சிவபதி, இந்திராகாந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மேயர் ஜெயா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, துணைமேயர் ஆசிக் மீரா, கோட்ட தலைவர் சீனிவாசன், அ.தி.மு.க பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம், மணிகண்டம் ஒன்றிய தலைவர் முத்துக்கருப்பன், கவுன்சிலர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மலர் கிரீடம்
இந்த விழாவில் மாநில அளவில் சாதனை படைத்த 99 வயது குலபதி குப்புசாமி, 88 வயது ராமையா, சகுந்தலா சீனிவாசன், சரஸ்வதி ஆகியோருக்கு அமைச்சர் வளர்மதி மலர் கிரீம் சூட்டி, விருதுகளை வழங்கினார். மேலும் 90 வயது முதல் 100 வயதுக்கு உட்பட்ட 36 முதியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முதியோர் தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியம், கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment