Wednesday, 2 October 2013

நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பத்திரப் பதிவுகளை இணையதளம் மூலம் கண்காணிக்கும் நவீன திட்டம் ரூ.170 கோடி செலவில் நடைமுறைப்படுத்த அரசு தீவிரம்

பத்திரப் பதிவு மோசடிகளுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வருவாய்த் துறையுடன் இணைந்து, அனைத்து பதிவுகளையும் அனைவரும் வெளிப்படையாக பார்க்கும் வகையிலான நவீன திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்.
ஒருங்கிணைந்த திட்டம்
தமிழகத்தில் பதிவாகும் குற்றங்களில் சமீப காலமாக நில மோசடி குற்றம் அதிக இடத்தை பிடித்து வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் பத்திரப்பதிவுத் துறை சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நில மோசடியில் முக்கிய இடம் பிடிப்பது பத்திரப் பதிவுதான். சில அலுவலர்களின் துணையில்லாமல் இந்த மோசடியை நடத்திவிட முடியாது.
எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளிப்படையான கொள்கையை பத்திரப்பதிவுத் துறை முன்வைத்துள்ளது. அதன்படி, வருவாய்த் துறையுடன் இணைந்து பத்திரப்பதிவுத் துறை, ஒருங்கிணைந்த திட்டத்தை ரூ.170 கோடி செலவில் நடைமுறைப்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தை விரைந்து அமல்படுத்தும் பணியில் பத்திரப்பதிவுத் துறைத் தலைவர் தர்மேந்திர பிரசாத் யாதவ் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பத்திரப் பதிவுத் துறையின் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-
சாப்ட்வேர் தயாரிப்பு
இந்த நவீன திட்டத்தின்படி, வருவாய்த்துறையிடம் உள்ள நில ஆவணங்கள், தாய்ப்பத்திரங்கள், பட்டாக்கள் ஆகியவை குறித்த அனைத்து விபரங்கள் தொடர்பான இணைப்பை பத்திரப் பதிவுத் துறை பெற்றுவிடும். இந்த இணைப்பை தனி இணையதளம் மூலம் மக்களுக்கு பத்திரப் பதிவுத் துறை அர்ப்பணித்துவிடும். அதன் பிறகு, எந்தெந்த பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன? யார் யார் யாருக்கு நில விற்பனை செய்கிறார்கள்? யாருக்கு பட்டா மாற்றப்படுகிறது? யாருடைய நிலம் யாருக்கு பதிவு செய்யப்படுகிறது? என்பது உட்பட அனைத்து விபரங்களையும், சர்வே எண் உள்ளிட்ட தகவலை வைத்து யாரும் அறிந்துகொள்ள முடியும்.இந்த இணைய தளத்துக்கான சாப்ட்வேர் தயாரிக்கும் பணிக்கான டெண்டர் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன. அதை அரசின் ஒப்புதலுக்கு பத்திரப்பதிவுத் துறை அனுப்பியுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் சாப்ட்வேர் தயாரிக்கும் பணி தொடங்கி, ஓராண்டுக்குள் முடிந்துவிடும் என்று தெரிகிறது. எனவே இன்னும் ஓராண்டுக்குள் பத்திரப் பதிவில் வெளிப்படையான நிலை நடைமுறைக்கு வந்துவிடும். எனவே ஒரு நபரின் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் வேறு ஒருவர் பெயரில் பதிவு செய்யும் மோசடியையும், அதை விற்பனை செய்து, விற்பனையையும் பதிவு செய்யும் மோசடியையும் நிலத்தின் உரிமையாளரே கண்காணிக்கலாம்.
வெளிநாட்டு இந்தியர்கள்
அதுமட்டுமல்லாமல், ஒரு நிலத்தை பலருக்கு விற்பனை செய்யும் மோசடியும் தடுக்கப்பட்டுவிடும். ஏனென்றால், ஒரு நிலம் குறித்த அனைத்து ஆவணப் பதிவுகளும் பட்டவர்த்தமாக கம்ப்யூட்டர் மூலம் காணப்படுவதால், ஒருமுறை விற்பனையாகி பதிவான தகவல் அதில் ஏற்கனவே இடம் பெற்றுவிடும். அதன் பிறகு மற்றொருவரை அந்த நில உரிமையாளர் ஏமாற்ற முடியாது.இது தவிர, தமிழகத்தில் நிலம் வைத்திருக்கும் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இந்த நிலங்களை மோசடியாளர்கள், எளிதாக போலி பத்திரங்களை தயாரித்து மற்றவர்களுக்கு விற்றுவிடுகின்றனர். மீண்டும் தமிழகத்துக்கு வரும்போது, தங்கள் நிலம் வேறொருவரிடம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இனி அந்த நிலை ஏற்படாது. ஏனென்றால், வெளிநாட்டில் இருந்தபடி அவர்கள் தங்கள் நிலம் குறித்த தகவல்களை அறிந்து கொண்டே இருக்கலாம்.
அதிகாரிக்கு அபராதம்
மேலும் பத்திரப் பதிவின் போது சம்பந்தப்பட்ட நபர்களின் அடையாளமும், ‘பயோ மெட்ரிக்’ முறையில் பதிவு செய்யப்பட்டுவிடும். எனவே ஆள் மாறாட்டம், மீண்டும் மோசடி விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட முடியாது. நில விற்பனை, பத்திரப்பதிவு, பதிவுச் சான்றிதழ் வழங்குதல் ஆகியவை ஒரே நாளில் வழங்கப்பட்டுவிடும். குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் ஆவணங்களை வழங்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும், ஒரு நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடும் இணையதளத்தில் அதற்கான சர்வே நம்பருக்கு அருகே குறிக்கப்பட்டு இருக்கும். அதையும் ஏற்றி, இறக்கி மோசடி செய்ய முடியாது. வழிகாட்டி மதிப்பீடு செய்யப்படாத பகுதிகளிலும் உடனே மதிப்பீடு செய்ய முடியும். வில்லங்க சான்றிதழ்கள் குறித்த தகவல்களும் தனி இணையதளத்தில் காட்டப்படும். சர்வே எண்ணை வைத்து அதையும் பார்த்துக் கொள்ளலாம்.
டி.டி. கமிஷன் தேவையில்லை
அதோடு, இந்த ஆவணங்களில் நில உரிமையாளர்களின் இ-மெயில், செல் எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அந்த நிலம் குறித்த ஆவணங்களில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டால் உடனடியாக இமெயில் மற்றும் செல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டுவிடும். பத்திரப் பதிவுக்கான கட்டணங்களை டி.டி. எடுக்கும்போது, வங்கியில் சேவைக்கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது. மேலும் டி.டி.யை வாங்குவதற்கு காலமும் விரையமாகிறது.
இதைத் தடுப்பதற்காக இணையதளத்தில் ‘செல்லான்’ ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறோம். அதில், அனைத்து விபரங்களையும் பதிவு செய்து வங்கியில் கொடுத்துவிட்டால், எந்தவித கட்டணமும் செலுத்தாமலும், காத்திருக்காமலும் வங்கியில் இருந்து டி.டி.யை வாங்கிவிடலாம். மேலும், பத்திரப் பதிவுகளுக்காக சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்வதற்கு முன்பு, சார் பதிவாளரை சந்திக்கும் நேரத்தை சில நாட்களுக்கு முன்னரே இணையதளத்தின் மூலம் பதிவு செய்துவிடலாம். எனவே மக்களை சந்திப்பதற்கு எந்த அதிகாரியும் மறுக்க முடியாது.தமிழக பத்திரப் பதிவுத்துறை 7.11.1864 அன்று தொடங்கப்பட்டது. தற்போது 150 ஆண்டுகளை இந்தத் துறை எட்டுகிறது. இதை விமரிசையாக கொண்டாடுவதற்கு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கண்காணிக்கும் காமிராக்கள்
பத்திரப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தமிழகத்தில் உள்ள 570 சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் தலா இரண்டு கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. யார் யார் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வருகிறார்கள் என்பதை ஒரு காமிராவும் (வாசலில்), சார் பதிவாளரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு மற்றொரு காமிராவும் (அலுவலகத்துக்குள்) பொருத்தப்படும். இந்த காமிராக்கள் மூலம், சார் பதிவாளர்களின் செயல்பாடுகளை பத்திரப் பதிவுத்துறை டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி. ஆகியோர் தங்கள் அறையில் இருந்தபடி கண்காணிப்பார்கள். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இது நடைமுறைக்கு வரும் என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment