Friday, 25 October 2013

வீடுகளில் சோலார் பேனல் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - மத்திய, மாநில அரசுகள் 50% தரும்


வீடு கூரைகளில் சோலார் கருவி பொருத்தும் திட்டத்திற்கு மானியம் அளிக்கப்படும். அதாவது 1 கிலோ வாட் அளவுக்கு பேனல்களை பொருத்தினால், மாநில அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் மானியம் அளிக்கப் படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.இந்நிலையில் இந்த திட்டத்திற்கான அரசு வழிகாட்டு மதிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சகத்தின் மதிப்புப்படி, வீட்டின் கூரையில் ஒரு கிலோ வாட் சோலார் பேனல்களை பொருத்த ரூ.1 லட்சம். அதில் ஏற்கனவே மத்திய அரசின் மானிய தொகை ரூ.30 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் மானியம் அளிக்கப்பட உள்ளது. எனவே மின்நுகர்வோர் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் போதும். ஆண்டுதோறும் சுமார் 1,600 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படும். இதனால், ஆண்டுக்கு ரூ.9,200 சேமிக்க முடியும்.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு 10,000 பேருக்கு மாநில அரசின் மானியம் அளிக்கப்படவுள்ளது. ஆனால், முதல் ஆண்டில் 5000 பேருக்கு மாநில அரசின் மானியம் அளிக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. அடுத்தடுத்து வரும் ஆண்டுக்கு தலா 10 ஆயிரம் பேருக்கு மானியம் அளிக்க நடவடிக்கை எடுக்கும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

மானியம் பெற விரும்புவோர் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை யின் இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். தனிநபராகவும், குழுவாகவும் மானியம் பெற முடியும். அதன்படி கேட்டும் விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒப்புதல் கடிதம் இமெயில் அல்லது எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகள் மூலம் சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு அனுப்பப்படும். சீனியாரி ட்டி அடிப்படையில் மின்நுகர்வோர் மானியத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மானியம் பெறுவோர் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை பரிந்துரை நிறுவனங்களின் பட்டியலில் தான் சோலார் கருவிகளை வாங்க வேண்டும். இதற்கு பேட்டரி இணைப்பு கொடுக்கப்படாது.

No comments:

Post a Comment