Saturday, 16 November 2013

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குதொழில்கல்வி கற்பிக்கப்படுமா?

 தொழில் நகரமான திருப்பூரில், மேல்நிலைப்பள்ளிகளில் தொழில்கல்வி கற்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், "ஒக்கேஷனல் குரூப்' எனப்படும் தொழில் பிரிவு உள்ளது. ஜி.எம்., எனப்படும் பொது இயந்திரவியல் (ஜெனரல் மெக்கானிசம்), டைப்ரைட்டிங் மற்றும் அலுவலக மேலாண்மை போன்ற படிப்புகள் உள்ளன. டெக்ஸ்டைல்ஸ், "நிட்டிங்', "டையிங்', பிரின்டிங் மற்றும் பேஷன் டெக்னாலஜி போன்ற தொழில்சார்ந்த படிப்புகள் மேல்நிலைப்பள்ளிகளில் உருவாக்கப்பட்டால், திருப்பூரை சேர்ந்த மாணவ, மாணவியர் சொந்த ஊர்களிலேயே வேலை வாய்ப்பு பெறும் நிலை உருவாகும்.

கல்லூரி படிப்புக்கும், மேல்நிலைப்பள்ளியில் கற்கும் தொழில் கல்வி உதவியாக அமையும். பி.காம்., படிக்கும் மாணவ, மாணவியருக்கு கணக்கு சார்ந்த வரவு-செலவு மற்றும் ஆடிட்டிங் சார்ந்த பணிக்கு அக்கல்வி உதவுகிறது. அதுபோல், தொழில் கல்வி உருவாக்குவதால், பனியன் தொழில் சார்ந்த பிரிவுகளில், வேலை வாய்ப்பு பெற முடியும்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "தொழில் சார்ந்த கல்வி படிக்கும் மாணவர்கள், டைப்ரைட்டிங் கற்பதன் மூலம் கடித தொடர்பில், கம்ப்யூட்டர் பயன்பாடு சுலபமாகிறது. "மெக்கானிசம்' கற்பதால், கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தொழில் சார்ந்த படிப்புகளால் கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்து மாணவர் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. அதில், அதிக மதிப்பெண் பெறவும் ஆர்வம் காட்டுவதில்லை. டெக்ஸ்டைல்ஸ், "நிட்டிங்', பிரின்டிங், பேஷன் டெக்னாலஜி போன்ற தொழில் கல்வி உருவாக்கப்பட்டால், திருப்பூரில் பனியன் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம்,' என்றார்.

ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலும், மேல்நிலைப்பள்ளிகளில் தொழில்கல்வி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தொழில் கல்வி கற்பிக்க தேவையான, அத்துறை சார்ந்த பயிற்சியாளர்கள், அவர்களுக்கு சம்பளம், தொழில்கல்வி பெறுவதற்கான செயல்முறை ஆய்வகங்கள் என பல வசதிகளும் தேவைப்படுகிறது. இத்திட்டத்தை அரசு செயல்படுத்தினால் மட்டுமே, நடைமுறை சிக்கல்களை தவிர்த்து, மாணவர்களுக்கு தொழில் கல்வி அளிக்க முடியும். கல்வி நிறுவனங்களும், கல்வித்துறை அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்து, இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், என, கல்வி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment