தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை விட அதிகளவில் சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயங்கி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 250 பள்ளிகள் தான் தமிழகத்தில் இருந்தது. ஆனால் தற்போது சுமார் 300 பள்ளிகளுக்கு மேல் இயங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறை 100 சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் தமிழகத்தை சேர்ந்தவர்களால் தான் சி.பி.எஸ்.இ பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் தமிழக அரசின் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் தனி ராஜ்யமாக இந்த பள்ளிகள் இயங்கி வருகிறது. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை கட்டண நிர்ணயக்குழு நிர்ணயம் செய்கிறது. ஆனால் அனைத்து சி.பி.எஸ்.இ பள்ளிகளும் எந்த வரம்பிற்குள்ளும் வராமல் தங்கள் இஷ்டத்திற்கு கட்டணத்தை வசூல் செய்கின்றன.
அதேபோல் மாணவர் சேர்க்கையிலும் எந்த கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதில்லை. இவர்களின் போக்கிற்கு தகுந்தாற்போல் சமீபத்தில் சி.பி.எஸ்.இ போர்டு சி.பி.எஸ்.இ பள்ளிகள் துவங்க மாநில அரசுகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற தேவையில்லை என்று அறிவித்தது. இந்த அறிவிப்பினால் குறுகிய காலத்தில் தமிழகத்தில் அதிக அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகள் உருவாகிவிட்டது. தமிழகத்தில் உள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு அரசு அல்லது அரசுஉதவி பெறும் பள்ளிகளில் வழங்குவதை விட தரமான கல்வியை சி.பி.எஸ்.இ பள்ளிகளால் மட்டுமே வழங்க முடியும் என்று நம்புகிறார்கள். எனவே சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்கவே பெற்றோர் விரும்புகின்றனர். பெற்றோரின் இந்த நம்பிக்கையை பயன்படுத்திக் கொள்ளும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் தங்கள் இஷ்டத்திற்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து வசூலிக்கின்றன.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக சி.பி.எஸ்.இ பள்ளிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழக கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, மாநில அரசின் விதிமுறைகள் சி.பி.எஸ்.இ பள்ளிகளையும் கட்டுப்படுத்தும் என சி.பி.எஸ்.இ சட்டத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவகாரங்களில் சி.பி.எஸ்.இ பள்ளிகளை ஒழுங்குபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த கருத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அப்போது அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார். மேலும் நடப்பு கல்வி ஆண்டு இறுதிக்குள் சி.பி.எஸ்.இ பள்ளிகளை தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான விதிமுறைகள் வெளியிடப்படலாம் என்றும், அவ்வாறு விதிமுறைகளை அரசு வெளியிட்டால் அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ பள்ளிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment