Monday, 2 December 2013

10 மணி நேரம் மின்வெட்டு: படிக்க முடியாமல் மாணவர்கள் அவதி

 விருத்தாசலம், கம்மாபுரம், பெண்ணாடம், திட்டக்குடி, சிறுபாக்கம், மங்கலம்பேட்டை பகுதிகளில் அறிவிக்காத பல மணி நேர மின் வெட்டால் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2008 முதல் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. தினசரி மின் தேவை 12 ஆயிரம் மெகா வாட் என்ற நிலையில், உற்பத்தி சராசரியாக 8,000 மெகா வாட் என்ற அளவில் உள்ளது. தேவையை விட மின் உற்பத்தி குறைவாக உள்ளதால் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மின் வெட்டு ஓரளவிற்கு சீரானதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மின் வெட்டு நேரம் மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பல மணி நேரம் வரை அறிவிக்காத மின் வெட்டு ஏற்படுகிறது. விருத்தாசலம், கம்மாபுரம், பெண்ணாடம், மங்கலம்பேட்டை, திட்டக்குடி, சிறுபாக்கம் பகுதிகளில் பகல், இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என 10 மணி நேரம் வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால் இப்பகுதி பொது மக்கள், மாணவ, மாணவிகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், சிறு, குறு தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதித்துள்ளனர்.
அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் வீடு, அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஏசி., கம்ப்யூட்டர், டிவி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகின்றன. இரவில் கொசுத் தொல்லையால் தூங்க முடியாமல் மக்கள் கடும் அவதியடைகின்றனர்.
மேலும், பள்ளிகளில் பிளஸ் 2விற்கு வரும் 10ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு 12ம் தேதியும், பிற வகுப்புகளுக்கு 13ம் தேதி அரையாண்டு தேர்வு துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. மின் வெட்டு காரணமாக இரவு நேரத்தில் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமம் அடைகின்றனர்.
இதனால் மாலை நேரத்தில் மின் வெட்டைத் தவிர்க்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். மேலும், மின் வெட்டு நேரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment