Monday, 2 December 2013

பழைய இரும்புக்கு விற்கப்படும் அரசு வழங்கிய இலவச சைக்கிள்

மேட்டூரில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச சைக்கிள், பழைய இரும்பு வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் அரசு வழங்கிய சைக்கிள் பழுதடைந்தால் அவ்வப்போது டயர், டியூப் மாற்றி பராமரித்து உபயோகிக்கின்றனர். சில மாணவர்கள் மேல் படிப்புக்காக வெளியூர் சென்று விடுவதால், அவரது குடும்பத்தினர் அந்த சைக்கிளை உபயோகிக்காமல் கிடப்பில் போட்டு விடுகின்றனர்.
மேலும், பல மாணவர்களின் பெற்றோர்கள், சைக்கிளை பயன்படுத்தாமல் பிறருக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இலவசமாக கிடைத்தது என்பதால், அந்த சைக்கிள்களை பழுதடையும் வரை உபயோக்கின்றனர். அதன் பின், பராமரிப்பு செய்யாமல், பழைய இரும்பு வியாபாரிகளுக்கு விற்று விடுகின்றனர்.
இது குறித்து மேட்டூரில் தள்ளுவண்டியில் பாத்திரம் விற்கும் வியாபாரி ஒருவர் கூறியதாவது: "பெரும்பாலான மாணவர்கள் அரசு வழங்கிய இலவச சைக்கிள் பழுதடைந்து விட்டால் மீண்டும் பழுது பார்ப்பதில்லை. இதனால், கிடப்பில் போடப்படும் சைக்கிள் துருபிடித்து வீணாகி விடும் சைக்கிளை, மாணவர்களின் பெற்றோர், எங்களிடம் விற்று பாத்திரம் வாங்கி கொள்கின்றனர்.
அரசு வழங்கிய சைக்கிள் 17 கிலோ எடை உள்ளது. அதனை 400 ரூபாய்க்கு வாங்குகிறோம். சமீபகாலமாக அரசு வழங்கிய சைக்கிளை பழைய இரும்புக்கு போட்டு பாத்திரம் வாங்குவோர் அதிகரித்துள்ளனர்." இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment