அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் நியமிக்கப்பட்ட 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர், தையல் ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள் என்றாலும் அனைத்துப் பணி நாள்களிலும் முழுநேரமும் பணியாற்றுகின்றனர்.
முழு ஆசிரியர்களுக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்யும் இவர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.
பகுதி நேர சிறப்பாசிரியர்களில் பலர் வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டிருப்பதால், அவர்கள் பெறும் ஊதியம் உணவு, தங்குமிடத்துக்குக்கூட போதுமானதாக இல்லை.
தங்களை நிரந்தர ஆசிரியர்களாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த ஓராண்டாகப் போராடியும் அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் முழுநேர சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 8-5-2013-இல் வெளியிட்டது. இவர்களுக்கு ரூ. 20,000 ஊதியம் வழங்கப்படவுள்ளது.
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவர்களில் தகுதி உடையவர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்தி பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment