Monday, 27 January 2014

எஸ்எம்எஸ் தகவலால் பள்ளிகளில் கொடியேற்றம் 2 மணி நேரம் தாமதம்


பள்ளி கல்வித்துறையிடம் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு வந்த எஸ்எம்எஸ் தகவலால் நங்கவள்ளி வட்டாரத்தில் 76 அரசு ஆரம்ப பள்ளிகளில் குடியரசு தின கொடியேற்று விழா 2 மணி நேரம் தாமதமாக நடந்தது.அரசு பள்ளிகளில் குடியரசு தின கொடியேற்று விழா காலை 8 மணிக்கு நடத்தப்படுவது வழக்கம். சேலம் மாவட்டம் நங்கவள்ளி வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் இருந்து சுமார் 7.50 மணியளவில் எஸ்எம்எஸ் வந்தது. 
அதில், காலை 8 மணிக்கு பதில் காலை 10 மணிக்கு கொடியேற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஒரு சில பள்ளிகளில் எஸ்எம்எஸ் தகவலை புறக்கணித்து வழக்கப்படி காலை 8 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பெரும்பாலான பள்ளிகளில் காலை 8 மணிக்கு நடைபெறவிருந்த கொடியேற்ற நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.காத்திருக்க விரும்பாத ஊர் முக்கிய பிரமுகர்கள், கல்விக்குழு தலைவர்கள் விழாவில் பங்கேற்காமல் கிளம்பிச் சென்றனர். காலையில் சாப்பிடாமல் விழாவுக்கு வந்திருந்த மாணவர்கள் பலர் கூடுதலாக 2 மணி நேரம் காத்திருந்ததால் மயக்கமடையும் நிலை ஏற்பட்டது. நங்கவள்ளி வட்டாரத்திலுள்ள 76 பள்ளிகளில் தாமதமாக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

இது குறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘காலை 10 மணிக்கு கொடி ஏற்றும்படி நேற்று முன்தினம் நங்கவள்ளி வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மின் அஞ்சல் வந்துள்ளது. இது குறித்து ஆசிரியர் சங்க தலைவருக்கு அவர் தகவல் அளித்துள்ளார். ஆசிரியர் கூட்டணி தலைவர் நேற்று காலை தான் தலைமை ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்துள்ளார். முன் கூட்டியே தகவல் தெரிவிக்காததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது கண்டிக்கத்தக்கது,‘‘ என்றார்.

No comments:

Post a Comment