அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளிக்கூட மாணவ – மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.சரோஜா தெரிவித்தார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தரமான கல்வி
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 1 முதல் 8–ம் வகுப்பு வரை அரசு, நகராட்சி, நலத்துறை, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ– மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த ஆண்டு பள்ளிக்கூட மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில பாடங்களில் வாசிக்கும் திறன், எழுதுதல் திறன் மற்றும் அடிப்படை கணிதம் செயல்பாடுகளை கண்டறியும் தேர்வு நடத்தப்பட்டது.
3, 5 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் தேர்வு நடந்தது.
மாணவ – மாணவிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13 வட்டாரங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டாரத்துக்கும் 10 பள்ளிக்கூடங்களை தேர்வு செய்து தேர்வு நடத்தப்பட்டது. ஒரு பள்ளிக்கூடத்தில் 30 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 3,900 மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதுதவிர ஆசிரியர்களுக்கு அந்தந்த பள்ளிக்கூடங்களைப் பற்றி எழுத்து மூலம் பதில் வாங்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் கல்வி கற்றல் திறன், பள்ளிக்கூடங்களில் உள்கட்டமைப்பு பற்றி பதில் வாங்கப்பட்டு உள்ளது.
கல்வி மேம்மாடு
8–வது வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்படும்போது, மாணவர்களின் கல்வி தரம் தெரியும். அதன்பிறகு மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 4 உண்டு உறைவிட பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் கண்டறியப்பட்டு சேர்க்கப்பட்டு உள்ளனர். கடந்த கல்வி ஆண்டில் 200 மாணவர்கள் சேர்க்கப்பட்டனா. வரும் கல்வி ஆண்டில் 926 மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
இவ்வாறு அனைவருக்கும் கல்வி இயக்க தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.சரோஜா கூறினார்.
No comments:
Post a Comment