பிளஸ் டூ தேர்வு மார்ச் 3-ஆம் தேதி தொடங்குகிறது. எதிர்காலப் படிப்பை நிர்ணயிக்கும் முக்கியத் தேர்வான பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதுவரை வினா-விடை வழங்கி வழிகாட்டிய ‘புதிய தலைமுறை கல்வி’, தேர்வு எழுதுவதற்கும் வழிகாட்டுகிறது. பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயனுள்ள யோசனைகள் இதோ...
தேர்வுக்கு முதல் நாளிலேயே தேவையான பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஹால் டிக்கெட்டை மறந்து விடாதீர்கள்!
படித்த பாடங்களை மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தேர்வு குறித்து பயம் வேண்டாம்! தன்னம்பிக்கையோடு இருங்கள்!
தேர்வுக்குச் செல்லும்போது பட்டினி வேண்டாம். அளவோடு சாப்பிட்டுச் செல்லவும். திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், தகுந்த மருந்துகளை சாப்பிட்டுவிட்டு தேர்வுக்குச் செல்லவும்.
தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு நடைபெறும் பள்ளிக்குச் சென்று விடுவது நல்லது. இதனால், பஸ் தாமதம் போன்ற கடைசி நேரப் பரபரப்புகளில் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்க முடியும்.
தேர்வு மைய வளாகத்தில் உங்களிடம் உள்ள பாடக் குறிப்புகளை சிறிது நேரம் திருப்பிப் பார்த்துவிட்டு அமைதியாக இருக்கவும். மற்றவர்களுடன் தேவையில்லாத அரட்டை வேண்டாம்.
தேர்வு அறையில் உங்களது தேர்வு எண் குறிப்பிடப்பட்டுள்ள இருக்கையில் அமரவும். அதற்கு முன்னதாக, உங்களது புத்தகங்களையும் உங்களது பையில் ஏதாவது பாடக்குறிப்புகளோ, காகிதங்களோ இருந்தால், அதையும் சேர்த்து தேர்வு அறைக்கு வெளியில் வைத்துவிட்டு வரவேண்டும்.
தேர்வுக் கூடத்தில் உங்களிடம் பிட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது காப்பி அடிப்பது தெரிந்தாலோ நீங்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டீர்கள். எனவே, குறுக்கு வழிகள் வேண்டாம்!
உங்களுக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டதும் பரபரப்பாக உடனே விடைகளை எழுதத் தொடங்கி விடாதீர்கள். தெரியாத அல்லது கடினமான வினாக்களைப் பார்த்து சோகமாகி விடாதீர்கள். வினாத்தாளை முழுமையாக படித்துப் பார்த்துவிட்டு முதலில், தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதத் தொடங்குங்கள்.
விடைத்தாளில் தேர்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ள இடத்தைத் தவிர வேறு இடங்களில் தேர்வு எண்ணையோ, பெயரையோ எழுதக் கூடாது. விடைத்தாளில் தேர்வு எண்ணை சரியாக எழுதியிருக்கிறோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.
தேர்வு அறையில் மற்ற மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். விடைகளை எழுதுவதில் மட்டுமே முழுமையான கவனம் இருக்கட்டும்.
ஒவ்வொரு வினாவுக்கும் விடை அளிக்க எவ்வளவு நேரம் என்று திட்டமிட்டுக்கொண்டு விடைகளை எழுத வேண்டும். இதனால், சில வினாக்களுக்குப் பதில் தெரிந்தும் நேரம் இல்லாமல் போய், விடை எழுதாமல் விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. சில வினாக்களுக்கு விடை எழுத அதிக நேரம் பிடிக்கலாம். அதுபோன்ற நிலையில், அடுத்து எழுதும் விடைகளில் அந்த நேரத்தைச் சரிசெய்துகொள்ள வேண்டும்.
விடை எழுதும்போது தேவையான இடங்களில் வரைபடங்களை வரைய வேண்டும். அதற்காக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
தேர்வு நேரத்தில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தேர்வுக்கூடக் கண்காணிப்பாளரிடம் மட்டுமே கேட்க வேண்டும். பக்கத்தில் உள்ள மாணவர்களிடம் கேட்கக்கூடாது.
ஆரம்பம் முதல் இறுதி வரை கையெழுத்து சீராக இருக்கட்டும். அதற்காக மெதுவாக எழுதி நேரத்தை வீணடிக்கவும் தேவையில்லை. கூடிய வரை அடித்து அடித்து எழுதுவதைக் தவிர்க்கவும்.
எந்த வினாவுக்கும் அரைகுறையாக விடையளிக்க வேண்டாம். சுருக்கமாகவாவது முழுமையாக விடை எழுத முயலுங்கள். ஏதேனும் ஒரு வினாவுக்கு விடை நன்கு தெரிகிறதே என்று நேரம் போவது தெரியாமல் தேவைக்கு அதிகமாக நீட்டி முழக்கி எழுதிக் கொண்டிருக்காதீர்கள். அப்புறம், மற்ற வினாக்களுக்கு விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
விடைகளை எழுதும்போது வினா எண்ணை சரியாக எழுத வேண்டும். விடைகளை எழுதி முடித்த பிறகு வினா எண்களை சரிபார்ப்பதுடன் எழுதிய விடைகளையும் சரிபார்க்க வேண்டும்.
தேர்வு நேரம் முடிய சிறிது நேரமே இருக்கிறது என்றால், எழுத வேண்டிய விடைகளை சுருக்கமாக எழுதி, உரிய நேரத்திற்குள் முடிக்கப் பார்க்க வேண்டும்.
தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுதி முடித்துவிட்டு, எழுதிய விடைகளை சரிபார்ப்பது நல்லது. தெரியாத வினாக்களுக்கு விடைகளை எழுதவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தெரிந்த அனைத்து வினாக்களுக்கான விடைகளை எழுதி முடித்துவிட்டு, பின்னர் தெரியாத வினாக்களுக்கான விடைகளை நினைவுக்குக் கொண்டுவந்து எழுத முயற்சிக்க வேண்டும்.
விடைத்தாளை, தேர்வு எழுதிய மேஜையிலேயே வைத்துவிட்டு வெளியேறக்கூடாது. விடைத்தாளை தேர்வுக்கூடக் கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டுதான் வெளியேற வேண்டும்.
விடா முயற்சியும் கடின உழைப்பும் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டிகள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள், வெற்றி நிச்சயம்!
No comments:
Post a Comment