Friday, 28 February 2014

"இன்று தலை குனிந்து படித்தால், நாளை தலைநிமிர்ந்து செல்லலாம்!''

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்தது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கதிரேசன், பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் இதோ...

இருக்கின்ற குறுகிய காலத்தில் புதிதாக பாடங்களைப் படிக்கத் தொடங்காதீர்கள். படித்த பாடங்களை மீண்டும் மீண்டும் நன்கு படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள். உங்களுக்கு நீங்களே தேர்வு வைத்து எழுதிப் பாருங்கள் அல்லது வீட்டில் உள்ளவர்களை கேள்வி கேட்கச் சொல்லி பதில் சொல்லலாம். இப்படிச் செய்தால் உங்கள் ஞாபகத் திறன் அதிகரிக்கும்.

சராசரி மாணவர்கள், மெதுவாக கற்போர் என யாராக இருந்தாலும் புளூ பிரிண்ட்படி 60 சதவீதப் பாடங்களைப் படித்தாலே சராசரியாக 85 சதவீத மதிப்பெண்களைப் பெற்று விடலாம்.

அப்படியும் படிக்க முடியாத மாணவர்களுக்கு, இந்தக் குறுகிய காலத்தில் புத்தகத்தில் உள்ள எளிய பாடங்களை தேர்வு செய்து அதனை படித்தால் குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண்கள் உறுதியாக எடுக்க முடியும். ஒரு மதிப்பெண் வினா- விடைகளில் நன்கு பயிற்சி செய்து கொள்வது நல்லது.  

தேர்வு நடைபெறும் வரை எந்தெந்தப் பாடங்களை எப்போதைக்குள் ரிவிஷன் செய்து முடிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக் கொண்டு அதனை செயல்படுத்த வேண்டும்.

இப்போதிருக்கும் மாணவர்களை அதிகம் சீரழிப்பது செல்போன், லேப்டாப் போன்றவைதான். தொலைக்காட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்வு முடியும் வரை, அவசியம் ஏற்பட்டால் தவிர மற்ற நேரங்களில் செல்போன், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. ஓய்வு நேரத்தில் சற்று நேரம் வேண்டுமானால் டி.வி. பார்க்க அனுமதிக்கலாம்.

பிள்ளைகள் சோர்ந்து போனால், தன்னம்பிக்கை வார்த்தைகளைக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். நாங்கள் உனக்காக இருக்கிறோம். நீ நன்கு படி, என்று நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

வீட்டில் அமைதியான சூழ்நிலையில் முழு கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். மாணவர்கள் காலையில் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிக்கென குறைந்தது 5 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். இது மனதை ஒருமுகப்படுத்த உதவும். இதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும்.

மனம் எந்த அளவுக்குப் படிப்பதற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உடல் நலனும் முக்கியம். உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அது மனதையும் பாதிக்கும், படிப்பையும் பாதிக்கும்.

தேர்வு எழுதும் காலம் வெயில் காலம் என்பதால், உடலைக் குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ளவேண்டும். இதற்காக மாமிச உணவுகளைத் தவிர்த்து விட்டு, காய்கறி, கீரைகள், பழ வகைகளை சாப்பிடுங்கள். படிக்கும்போது, வயிறு முட்ட சாப்பிட வேண்டாம்.

தேர்வு நேரம் என்றாலும் தினந்தோறும் குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவு பதினோரு மணிவரை படிக்கிறீர்கள் என்றால் மறுநாள் காலை 5 மணிக்கு எழுந்துகொள்ள வேண்டும். நள்ளிரவு 12 மணி வரை  படிக்கிறீர்கள் என்றால் மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும். மூளை சுறுசுறுப்பாக இருக்க குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கம் அவசியம். தேர்வுக்கு முந்தைய தினங்கள் இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிக்க வேண்டாம்.

தேர்வுக் கூடத்திற்குச் சென்று கேள்வித்தாளைப் பார்த்ததும் கடகடவென்று எழுத ஆரம்பித்து விடாதீர்கள். பத்து நிமிடம் கேள்வித்தாளை ஆழ்ந்து படியுங்கள். கேள்விகளைப் புரிந்துகொண்டு, நம்பிக்கையோடு தேர்வினை எழுதுங்கள்.

இன்று தலை குனிந்து படித்தால், நாளை தலைநிமிர்ந்து செல்லலாம் என்பதை மனதில் கொண்டு படியுங்கள். வெற்றி உங்கள் வசமாகட்டும்.

No comments:

Post a Comment