Wednesday, 5 February 2014

பள்ளி கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்வதில் தாமதம்: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மீது அதிருப்தி

அரசு பள்ளிக்கு, கட்டடம் கட்ட, இடம் தேர்வு செய்ய வலியுறுத்தி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து மனு கொடுத்து வருகிறார். ஆனால், விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் பாராமுகமாக உள்ளது. இதனால், மாணவ, மாணவியர், மரத்தடியில் படிக்கின்றனர்.

விழுப்புரத்தை அடுத்துள்ளது ஏழுசெம்பொன் கிராமம். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 2011ல், உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்தப்பட்டது; 180 மாணவ, மாணவியர், எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளிலே, உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது.

மனு: '




அந்த கட்டடம், போதுமானதாக இல்லை. மாணவ, மாணவியர், மரத்தடியில் படிக்கும், அவல நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, உயர்நிலைப் பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்ட வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, அந்த கிராமத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற, பள்ளித் தலைமை ஆசிரியரும், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான சுப்ரமணியன், அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.

இடம் பரிந்துரை:




அதிகாரிகள், அவரிடம், இடம் தேர்வு செய்து கொடுத்தால், பள்ளி கட்டடம் கட்ட, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில், கிராம மக்கள், மூன்று இடத்தை தேர்வு செய்து, அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். 'மூன்று இடங்களிலும், ஆக்கிரமிப்பு உள்ளது. அவற்றை அகற்றிவிட்டு, கட்டடம் கட்டிக் கொள்ளலாம்' என, பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால், அப்பகுதி ஊராட்சி தலைவர், கிராமத்திற்கு ஒதுக்குபுறமாக உள்ள, கோவில் புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, அனுப்பி உள்ளார்.

பாராமுகம்:




அந்த இடத்தில், 2.15 ஏக்கர் மட்டுமே உள்ளது; இது போதுமானதல்ல. பொதுமக்கள் குறிப்பிட்ட இடம், 10 ஏக்கரில் உள்ளது. ஊராட்சி தலைவர் பரிந்துரை செய்த இடத்தின் அருகே, ஒரு ஏக்கரில் குளம் உள்ளது; மின் மாற்றி உள்ளது; இப்பகுதி பாதுகாப்பானதல்ல. எனவே, கிராம மக்கள் தேர்வு செய்த இடத்தில், ஏதேனும் ஒன்றில், கட்டடம் கட்டக் கோரி, சுப்ரமணியன், அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இது குறித்து, சுப்ரமணியன் கூறியதாவது: நான், ஆரம்பக் கல்வியை, இப்பள்ளியில் படித்தேன். கிராம மக்கள் பரிந்துரை செய்த இடத்தில், ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது.10 முறை கலெக்டரிடம் மனு கொடுத்தேன். கல்வித்துறை அமைச்சர், வருவாய் துறை அமைச்சர் ஆகியோரின், பரிந்துரை கடிதம் வாங்கி கொடுத்தேன். ஆனால், கலெக்டர் பாராமுகமாக உள்ளார். கிராம மக்களிடம், கையெழுத்து பெற்று, மூன்று ஆண்டுகளாக, மனு கொடுத்து வருகிறேன். முதல்வர் தனிப்பிரிவிலும், மனு கொடுத்துள்ளேன். இது வரை, எவ்வித நடவடிக்கையும் இல்லை. முதல்வர் கவனத்திற்கு சென்றால், பள்ளிக்கு கட்டடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment