பள்ளியில் படிக்கும் மாணவர்களை தேர்ச்சி விகிதத்திற்காக தனி தேர்வர்களாக தேர்வெழுத வைக்கும் நடவடிக்கையில் சில ஆசிரியர்கள் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், 7,281 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு மார்ச் 3ல் தொடங்கி 25ம் தேதி முடிவடைந்தது.
இத்தேர்வை 8.26 லட்சம் பள்ளி மாணவர்களும், 53 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுதினர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. ஏப்.9ம் தேதி வரை நடக்கிறது. இத் தேர்வை 10 லட்சத்து 39 ஆயிரம் பள்ளி மாணவர்களும், 75 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.
அரசு தேர்விற்கு சில மாதங்களுக்கு முன் பள்ளிகளில் இருந்து சரியாக படிக்காத மாணவர்களை நீக்குவது, அல்லது பள்ளியில் படித்தாலும் தேர்வெழுத அனுமதிக்காமல் பொதுத்தேர்வு முடிந்தவுடன் வரும் உடனடித்தேர்வில் எழுதலாம் என பெற்றோரிடம் எழுதி வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சில பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடுகின்றன. பொதுத்தேர்வின் போது பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் பேசப்படுகிறது.
உடனடி தேர்வின் போது, அதில் பங்கேற்கும் மாணவர்கள் தனி தேர்வர்களாகவே கணக்கிடப்படுவர். பொதுத்தேர்வின் போது பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமாராக படிக்கும் மாணவர்களை தனி தேர்வர்களாக தேர்வு எழுத வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இதுகுறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர் சிலர் கூறுகையில், `பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை தனியார் பள்ளிகள் சேர்ப்பதில்லை. அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டுமே சேர்க்கின்றனர்.
படிப்பில் எவ்வளவு சுமாராக இருந்தாலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் அந்த மாணவர்களை கண்டிப்பாக சேர்த்தாக வேண்டும். அதே நேரம் தேர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும் என கல்வித்துறை அழுத்தம் கொடுக்கிறது.
ஆசிரியர்களால் முன்புபோல் மாணவர்களை கண்டித்து படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் கல்வித்துறை அழுத்தம் கொடுப்பதால் இதுபோல் சம்பவங்கள் நடக்க தொடங்கியுள்ளன. மதிப்பெண் கணக்கீடு, தேர்ச்சி விகிதம் என தனியார் பள்ளிகளோடு ஒப்பிடுவதே இதற்கு காரணம் என்றனர்.
No comments:
Post a Comment